Tuesday, December 11, 2012

உமை கவிதை செய்கின்றாள் !

           [Bharathi.jpg]
படத்துக்கு நன்றி: http://photobucket.com/images/women%20power/

உமை கவிதை செய்கின்றாள் !
(பாரதியாரின்  பிறந்தநாளான  இன்று (11-12-12)
பாஞ்சாலி சபதத்தில் "மாலை வருணனை "யில்  
ஒரு பகுதி கீழே:)

பாரடியோ!வானத்திற் புதுமையெல்லாம் .
        பண்மொழீ !கணந்தோறும் மாறி மாறி
ஓரடி மற்றோரடியோ டொத்தலின்றி
       உவகையுற நவநவமாத் தோன்றுங் காட்சி;
யாரடி இங்கிவைபோலப் புவியின் மீதே
      எண்ணரியப் பொருள் கொடுத்தும் இயற்றவல்லார் !
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
     செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக்காண்பாய் !

கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
      கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் ;
கணந்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும்
      கருதிடவும் சொல்லிடவும் எளியதோ?ஆங்கே ,
கணந்தோறும் ஒரு புதிய வண்ணங்காட்டி
      காளிபராசக்தி அவள் களிக்குங்கோலம்
கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
      கருதுவதன் விளக்கத்தை இங்குக்காண்பாய்.

அடிவானத்தே அங்கு பரிதிக்கோளம்
        அளப்பரிய விரைவினோடு சுழலக் காண்பாய் .
இடிவானத்தொளிமின்னல் பத்துக்கோடி
         எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து ,
முடிவானவட்டத்தைக்காளி ஆங்கே
       மொய்குழலாய்!சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவானதொன்றாகத் தகடிரண்டு
        வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.

அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே 
          அசைவுறுமோர் மின்செய்த வட்டு;முன்னே ,
சமையுமொரு பச்சைநிற வட்டங்காண்பாய்;
           தரணியிலிங்கிதுபோலோர்  பசுமைஉண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக்கால்கள் 
            எண்ணில்லாதிடையிடையே எழுதல் காண்பாய்.
உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே 
உரைத்திடுவோம்,"பல்லாண்டு வாழ்க!"என்றே.
         









 

Tuesday, November 27, 2012

கார்த்திகை பஜனைப்பாட்டு

 
கார்த்திகை பஜனைப்பாட்டு
(Subbusir sings:
http://www.youtube.com/watch?v=yUMK8rcZeDY&feature=player_embedded)

அகல் விளக்கு ஏற்றி வைத்தோம் ,அலைவாய் அழகா!
அஞ்ஞான இருள் அழிப்பாய் ,குன்றாடும் குழகா!
தினையுடன் தேன் உனக்களித்தோம் ,வனமாலிமருகா!
துணைவருவாய் ,வினையறுப்பாய்,முனைவேல்முருகா!
அலைவாய் அழகா!குன்றாடும் குழகா!
வனமாலிமருகா!முனைவேல்முருகா!

ஜகம்புகழும் சிவைமகனே!சுப்பிரமணியா!
தகப்பனுக்குப் பாடஞ்சொன்ன ஒப்பற்ற தனயா!
திகழாறு முகத்தானே!கார்த்திகேயா !
அகம் அமர்ந்து சுகமருள்வாய்,காங்கேயா!
சுப்பிரமணியா!  ஒப்பற்ற தனயா!
கார்த்திகேயா !காங்கேயா!

குஞ்சிதபாதன்மைந்தா!குஞ்சரி காந்தா!
வஞ்சிநாதா!குறிஞ்சிவேந்தா!சண்முகசேந்தா!
சிந்தையிலுன் மந்திரமே,கந்தா!அனந்தா!
உந்தன் திருக்காட்சி தினம் காணும் வரம்தா!
குஞ்சரி காந்தா!சண்முகசேந்தா!
கந்தா!அனந்தா!காணும் வரம்தா!
உனைக்காணும் வரம் தா !
தினம் காணும் வரம் தா!
















 

Monday, November 19, 2012

ஷண்முகனுக்கு ஷடாக்ஷரத்துதி




ஷண்முகனுக்கு ஷடாக்ஷரத்துதி 

க்தி  புத்திரனை சித்தத்தில் நிறைப்போம் .
தாசிவமகனின் திருத்துதி இசைப்போம் .
ண்முகன் நந்நாமம் நெஞ்சில் நினைப்போம் .
காரமுறை குகன் மந்திரம் உரைப்போம்.

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

த்தவர்ணனவன் திருப்பதம்  தொழுவோம் .
ங்கன் மருகனவன் திருப்பெயர் மொழிவோம் .
த்னவேலுடையோன் முன் கை குவிப்போம்.
காரமுறை குகன் மந்திரம் ஜெபிப்போம் .

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

ள்ளிநாயகன் பதம் இதயத்தில் பதிப்போம்.
ரதாயகன்  புகழ் பாடித் துதிப்போம்.
டிவேலவன் நாமம் நாளெல்லாம் நவில்வோம்.
காரமுறை குகன் மந்திரம் பயில்வோம்.

சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

பதிக்கிளையோனின்  வெண்ணீறு  அணிவோம் .
குக்குன்றாம் குமரனின் இணையடி பணிவோம்.
லாய் உதித்தோன்  அருட்சுனையினில் நனைவோம் .
காரமுறை குகன் மந்திரம் நவில்வோம் .

சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

ரமகுருவின் திருப்பொடி  புனைந்திடுவோம். 
ன்னிருகண்ணனின் பதம் பரவிடுவோம். 
க்தவத்சலனைப் பாடிப் போற்றிடுவோம். 
காரமுறைவோன் பேர்  உருவேற்றிடுவோம். 

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்


ண்ணமயில் வாகனனை வணங்கிடுவோம். 
ல்வினையறுப்போனை  வழிபடுவோம். 
ள்ளலை வாழ்த்தித் துதி பாடிடுவோம்.
காரமுறைவோன் மந்திரம் ஓதிடுவோம்.  

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்




 

Saturday, November 17, 2012

ஈசன்மகனே !வா!





ஈசன்மகனே !வா!
(Subbusir sings:
http://www.youtube.com/watch?v=8Z13vf2HFhY&feature=em-share_video_user )

 பாசத்தினைப் பிசைந்தேன் , பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
நேசமனமடியமர்த்தி ஆசையாய் ஊட்டிவிடக் 
காத்திருக்கேன் ;நீ புசிக்கவா!

கயிலாயரின்  அழல் நயனத்தில் பூத்தவனே!
கயல்விழியாள் தவப்பயனே!வா!
உயிரொலியின் பொருள் வினவி,அயனின் செருக்கழித்தவனே!
மயிலேறி நீ விரைந்து வா!

பாசத்தினைப் பிசைந்தேன் ,பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!

வெண்ணீற்று மணங்கமழும்  பொன்னெழில் மேனியனே!
பன்னிருகண்ணனே!வா!
மின்னலென  ஒளிரும் உன்னன்னையின்  வேலேந்தி 
கண்மணியே!சுப்ரமணியா!வா!

பாசத்தினைப் பிசைந்தேன், பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!

ஈசனுக்கு  ஏரகத்தில்   ஆசானாய்ப்  பாடஞ்சொன்ன 
மாசில்லாமணியே !நீவா!
காழிச்சேயாய்த் தமிழில் வீழிநாதன்  புகழிசைத்த 
வேலாயுதா !வேகம் வா !

பாசத்தினைப் பிசைந்தேன் , பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
நேசமனமடியமர்த்தி ஆசையாய் ஊட்டிவிடக்
காத்திருக்கேன் ;நீ புசிக்கவா!


 

Wednesday, October 31, 2012

ஆறெழுத்தோது!



               ஆறெழுத்தோது !

இணையுன் மனத்தை குகனின்  பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!

நாதம்பிறந்ததவன் பொருள்சொன்ன பிரணவத்தில் !
கீதம்பிறந்ததவன் கிண்கிணிக்கழலொலியில்!
வேதங்கள்வாழ்த்திடும் வண்ணமயிலோனவன்
பாதங்களே படகாம் பிறவிக்கடல்தாண்ட!

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!

பாயும்புலியுமோர் பூனைபோல் பதுங்கிடும்,
நோய்களும்பேய்களும் அண்டாமல் ஒதுங்கிடும்,
தீயுந்தணிந்து இளந்தென்றலாய்த்தழுவிடும்,
ஓயாதவன்நாமம் ஓதியே  வழிபட்டால்!

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!


 
நடந்தாலவன் கோயில் நோக்கிமட்டும் நட!
படுத்தாலவன்பாதம் பணியமட்டும் படு !
அறிவிலியே! வாய்திறந்தால் கடைதேற்றும்
ஆறெழுத்தையோத மட்டும் அசை உன் நா !

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!


 
முகங்கள் மூவிரண்டுமுன் அகத்தினில் நிலைத்திடில்
நிகழ்பவையாவும் சுபமே!-இடர்நீக்கும்
விகடச்சக்கரன்தம்பி விரைகழல்பற்றியே
புகலடைந்தோர் வாழ்வில் பொங்கிடும்மங்களமே !

இணையுன் மனத்தை குகனின் பதமலரோடு !
அனைத்தும்மறந்து அந்த ஆறெழுத்தோது !
ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!ஓம் சரவணபவா!

 

Monday, October 22, 2012

வாணியை வேண்டுதல்



வாணியை வேண்டுதல் 
(பாரதியாரின்  பாஞ்சாலி சபதத்திலிருந்து  கிடைத்த 
 சரஸ்வதி  துதி )

தெளிவுறவே அறிந்திடுதல்;தெளிவுதர 

            மொழிந்திடுதல்;சிந்திப்பார்க்கே 

களிவளர உள்ளத்தில் ஆனந்தக்கனவு பல 

              காட்டல் ,கண்ணீர்த் 

துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம்

               நீ அருளும் தொழில்களன்றோ ?

ஒளிவளருந்தமிழ்வாணீ !அடியநேற் 

                 கிவையனைத்தும்  உதவுவாயே.
 

Thursday, October 18, 2012



நவராத்திரி துதி பாடுவோம்

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

பங்கயக்கரங்களில் பூங்கணை ஐந்தும் ,
செங்கரும்பும் பாசாங்குசமும் தாங்கி
அன்பால் நம்மை ஆண்டருள் புரியும்
அம்பிகையவளின் ஒன்பது இரவும்
கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

முதல் மூன்றிரவினில் துர்க்கையாகி
தீயசக்திகளை மாய்த்து ஒழிக்க
நெஞ்சுறமும் உடல்பலமும் அருளும்
கருணாசாகரி,பரமேஸ்வரியை

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

இடை மூன்றிரவினில் திருமகளாகி
குறைவற்றதனமும் நிறைந்தமனமும்
இல்லார்க்கீயும் வள்ளல்குணமும்
நமக்கருளும் இமகிரிமகளவளை
கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

கடை மூன்றிரவினில் கலைமகளாகி
அஞானமகற்றி மெய்ஞானமூட்டி
ஆயகலைகள் அறுபத்துநான்கும்
அருளும் தாய் அபிராமவல்லியை

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

மங்கலந்தரும் சங்கரன் மங்கையவள்;
சஞ்சலந்தீர்க்கும் ரங்கனின் தங்கையவள்;
என்றும் வற்றா கருணைக் கங்கையவள்;
நம் நலங்காக்கும் நவராத்திரி நங்கையவள்.

கொலுவைத்து அன்னையைக் கொண்டாடுவோம்.-அவள்
மலர்ப்பதம் பணிந்தே துதி பாடிடுவோம் ;

Wednesday, September 19, 2012

தெருமூலை தெய்வம்


 தெருமூலை தெய்வம்
(மெட்டு -அமைதியான நதியினிலே ஓடம்)

தெருமூலை தெய்வம் பிள்ளையாரு--அரச
நிழலில் குந்தி நம்மை ஆள்கிறாரு;
எளியவர்க்கு எளியவராய்
எலிமேலே ஏறிவரும்
கலியுகத்துக்கடவுள் பிள்ளையாரு --எங்கள் (தெருமூலை)

சதுர்த்தியிலே சனங்களெல்லாம்
கூடிநின்று குடைபிடிக்க,
ஊர்வலமாய் சுத்திவந்து
தீர்த்துவைப்பார் நம்மகுறை;
காத்திடுவார் கடைசி வரை
தெருமூலை தெய்வம் பிள்ளையாரு-.....

உள்ளத்திலே அவரை எண்ணி
புல்லைப்போட்டு பூசைபண்ணி

படைத்திடுவோம் தேங்காதண்ணி;
முடித்துவைப்பார் எடுத்தபணி ;
தடங்கலே வராது இனி !
தெருமூலை தெய்வம் பிள்ளையாரு-



Tuesday, September 11, 2012

பாரதியாரின் முருகன்பாட்டு

[Bharathi.jpg]                                                              
பாரதியாரின் முருகன்பாட்டு
11th செப்டெம்பர் பாரதியாரின் நினைவுநாள்   )
subbusir sings:
http://kandhanaithuthi.blogspot.in/2012/09/blog-post.html

வீரத்திருவிழிப் பார்வையும் -வெற்றி
வேலும் மயிலும் என் முன்னின்றே -எந்த
நேரத்திலும் என்னைக் காக்குமே;-அன்னை
நீலி பராசக்தி தண்ணருட்-கரை
ஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்
ஊக்கத்தை என்னுள்ளம் நாடுதே;-மலை
வாரத்திலே விளையாடுவான்-என்றும் 
வானவர் துன்பத்தைச் சாடுவான் . 

வேடர்கனியை விரும்பியே-தவ
வேடம்புனைந்து திரிகுவான்;-தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே -முனி 
நாதனுக்கிம்மொழி கூறுவான் ;-சுரர் 
பாடு விடிந்து மகிழ்ந்திட -இருட் 
பாரமலைகளைச் சீறுவான் ;-மறை 
யேடு தரித்த முதல்வனும் -குரு 
வென்றிட மெய்ப்புகழ் ஏறுவான் . 
  
தேவர் மகளை மணந்திடத் -தெற்குத் 
தீவிலசுரனை மாய்த்திட்டான்;-மக்கள்
யாவருக்குந்தலை யாயினான்;-மறை
அர்த்தமுணர்த்து நல்வாயினான்;-தமிழ்ப்
பாவலர்க்கின்னருள் செய்குவான்;-இந்தப்
பாரில் அறமழை பெய்குவான்;-நெஞ்சின்
ஆவலறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.

தீவளர்த்தே பழவேதியர் -நின்றன்
சேவகத்தின் புகழ் காட்டினார்;-ஒளி
மீவளருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையினாலறம் நாட்டினார்;-ஐய!
நீவளருங்குருவெற்பிலே;-வந்து
நின்று நின் சேவகம் பாடுவோம் -வரம்
ஈவள்  பராசக்தி யன்னைதான்-உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம் -நின்றன் (வீரத்)

Thursday, August 23, 2012

நலந்தரும் தலம்


நலந்தரும் தலம்

( "கங்கைக் கரைத் தோட்டம்"..மெட்டில் பாடிப்பாருங்க )

அமரரைக்காக்க
       அசுரரையழித்த
குமரன் அமர்ந்த தலம் ..செந்தூர்
         நலந்தரும் புனித தலம்.
சீரலைவாய் என   
          பாரோர்புகழும்
பேருடன் திகழும் தலம் ..செந்தூர்
         ஆழ்கடல் சூழ்ந்த தலம்

சூரபத்மன் தன்னைக்கொன்று,
வெற்றிமாலை சூடிக்கொண்டு,
செந்தில்மலை வந்தகந்தன்
தந்தையாரைப்  பூஜைசெய்ய
பூவேந்தும்  கரத்தானாய்  
பவ்யதிருக்கோலம்
காட்டும் திவ்யதலம்..செந்தூர்
பக்தரின் புண்ய தலம்.

அமரரைக்காக்க
               அசுரரையழித்த
குமரன் அமர்ந்த தலம் ..செந்தூர்
               நலந்தரும் புனித தலம்.

பன்னிருகரத்தவனை
பயபக்தியாய்ப்பணிந்து,
பன்னீரிலையில் தந்த
வெண்ணீற்றினைஅணிந்தால்
அல்லலெல்லாம்  நீங்கும்;
செல்வவளம் ஓங்கும்;
 நிழலெனத் துணைவருவான் -கந்தன்
கழலினில் புகல்  தருவான் .

அமரரைக்காக்க
        அசுரரையழித்த
குமரன் அமர்ந்த தலம் ..செந்தூர்
          நலந்தரும் புனித தலம்.



 

Friday, August 10, 2012

கனலாய் உதித்த அருட்புனல்




கனலாய் உதித்த அருட்புனல்
(subbu sir sings:
  http://www.youtube.com/watch?v=RBucGWKRJDo&feature=player_embedded )

புனல்சூடும் புராரியின்  நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!!
இணையில்லா உன் இணையடிதன்னைப் 
பணிவோர்க்குப் புகல்தா!

கனியால் கனிந்து கோவணாண்டிக்கோலம்
 புனைந்த பழநிபாலா!
உனை  நினைந்துருகும் பக்தரின் முந்தை
வினைமுறி  வடிவேலா!


புனல்சூடும் புராரியின்  நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!

ப்ரணவப்பொருள்  சொல்லி பரமகுருவான 
புனிதா!சுவாமிநாதா!
அனுதினம் ஆறெழுத்தை ஜெபிப்போர்க்கு 
இனி பிறவா வரம்  தா ! 


புனல்சூடும் புராரியின்  நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!

தினையுடன் மனமும் தந்த வனிதையை
மணந்த தணிகையழகா!
"துணைநீயே!"எனும் தீனரை அருளாலே 
அணைத்திடு!ஆறுமுகா

புனல்சூடும் புராரியின் நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!







Tuesday, July 31, 2012

அக்னிப்பூவே!வந்தனம் !



அக்னிப்பூவே!வந்தனம் !

தென்றல் தாங்கிவர,கங்கை வாங்கித்தர,
கன்னியர் வளர்த்த அக்னிப்பூவே!
மன்றாடி மைந்தா!குன்றாடுங்கந்தா!
வந்தனம்!அமரர் படைக்கோவே!

புனலணியும் அரனின் அனல்விழிப்பொழிலில் 
         அரும்பிய ஞானக் கனற்போதே !
உனைப்பணிந்திடுவோர் மன இருள்தன்னை 
          மாய்த்திட வருவாய் மயில்மீதே! 

தென்றல் தாங்கிவர,கங்கை வாங்கித்தர,
கன்னியர் வளர்த்த அக்னிப்பூவே!
மன்றாடி மைந்தா!குன்றாடுங்கந்தா!
வந்தனம்!அமரர் படைக்கோவே!

நிலவணியும் நிமலன் நங்கையுறவின்றி
            விழியால் படைத்த அதிசயமே  !
கலியுக வரதா!மலரடி தொழுதோம்;
           அகற்றிடுவாய் எங்கள் பவபயமே!

தென்றல் தாங்கிவர,கங்கை வாங்கித்தர,

கன்னியர் வளர்த்த அக்னிப்பூவே!
மன்றாடி மைந்தா!குன்றாடுங்கந்தா!
வந்தனம்!அமரர் படைக்கோவே!






Tuesday, July 24, 2012

மயிலே!மனமார்ந்த நன்றி!



மயிலே!மனமார்ந்த நன்றி!
( "தீராத விளையாட்டுப் பிள்ளை " மெட்டு )


மயிலே! உனக்கு மிகவும்  நன்றி,--நாங்கள்
தவிக்கிறோம் உனைப்புகழத் தகுந்தசொல் இன்றி.[.மயிலே....]

கனிக்காக உன்மேல்புவி பவனி ...வந்த
கந்தன் கனிகிட்டாமல் சினந்தாண்டியாகி ,
தென்பழநிமலையில் எழுந்தருளி ...தமிழ்த்
தெய்வமாய்த் தமிழர்க்கு அருளவழிசெய்த

மயிலே உனக்கு மிகவும் நன்றி!

 பழனியிலே ஆண்டிக்கோலம்,..ஸ்வாமி

மலையிலே ஓங்காரம் விளக்குங்குருக்கோலம் ,
செந்தூரில் சிவபூஜைக்கோலம் ...என்று
கந்தனின் கோலம்பல காணவழிசெய்த

 மயிலே உனக்கு மிகவும் நன்றி!

 குன்றத்தில் சுரமகள் கணவன் ,..குறக்

கன்னியுடன் பழமுதிர்ச்சோலையில் முனிவன் , 
தணிகையில் வள்ளியின் துணைவன்,--என்று
குகனின் எழிற் கோலம்பல காணவழிசெய்த


மயிலே உனக்கு மிகவும் நன்றி,--நாங்கள்

தவிக்கிறோம் உனைப்புகழத் தகுந்தசொல் இன்றி.
மயிலே மனமார்ந்த நன்றி!!--வண்ண
மயிலே மனமார்ந்த நன்றி!!--தோகை
மயிலே மனமார்ந்த நன்றி!!

மனமார்ந்த நன்றி!!



















Saturday, July 14, 2012

அருந்து ஆறெழுத்தெனும் மருந்து !

                   
அருந்து ஆறெழுத்தெனும் மருந்து !
(சுப்பு ஐயா கீழுள்ள லிங்கில் பாடுவதைக் கேட்கவும்)
http://www.youtube.com/watch?v=dJpN5oNH_kA&feature=em-share_video_user

http://www.youtube.com/watch?v=wofBs1SDGzU&feature=youtu.be


ஓம்சரவணபவா சரணம் ,ஓம்சரவண பவா சரணம்,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்

கனிகிட்டாத காரணத்தாலே
சினந்ததுபோலொரு லீலைசெய்து
அனைத்தும் துறந்து ஆண்டிக்கோலம்
புனைந்த பழநிபாலா!


ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்,




பரமனுந்திருவாய் மூடியே உந்தன்
விரைகழலருகே வினயமாய் அமர ,
பிரணவம் விளக்கி சிவகுருவான
ஏரகஸ்வாமிநாதா!


ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்,




அரிமகள் அம்ருதவல்லியாய்ப்பெருந்தவம்
புரிந்தே இந்திரன்மகளாய்ப்பிறந்த
சுரகுஞ்சரியை நன்மணங் கொண்ட

திருப்பரங்குன்றக் குமரா!


ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,

எழில்மிகு குறமகள் வள்ளியின்முன்னே

கிழமுனிவரின் வேடத்தில் வந்து
பழகியே பற்பல லீலைகள் புரிந்த
பழமுதிர்ச் சோலை வேலா!


ஓம்சரவண பவா, ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,

திருமால்செல்வி சுந்தரவல்லியாய்

அருந்தவம்புரிந்து குறமகளாய் மறு
பிறவி எடுத்த வள்ளியை  மணந்த
திருத்தணிகை முருகா!


ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம்
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,

ஆறெழுத்துள்ள உன்பேர்ஜெபிப்போர்க்கு

நீறுடன் பன்னீரிலைதனையருளி
தீராநோய்களைத் தீர்த்தருள்புரியும்
சீரலைவாய் முருகா!


ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா, ஓம்சரவண பவாசரணம்
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,





Tuesday, July 10, 2012

வேலவா!வா!!



வேலவா!வா!!

கந்தன் என்றால் கருணை வடிவம்;

கார்த்திகேயன் காக்கும் தெய்வம்;
குமரன் அவனைக் கும்பிட்டு தினம்
கூவி அழைப்போம்;கூடி அழைப்போம்.


கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!


ஆலவாயானுக்கு ப்ரணவப்பொருள் சொன்ன
வேலவா!வடி வேலவா!
கோல மயிலேறி ஞாலம் வலம் வந்த
பாலனே!எனை ஆளவா!

கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!


அமரரைக்காக்க அசுரரைத்துணித்த
குமரேசா! வள்ளி மனவாசா !
தில்லை நடம் செய் கனக சபேசனின்
பிள்ளையே ! எனை ஆள வா!


கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!


மண்ணிலுதிர்த்த பழங்களை ஊதி
உண்ணச்சென்ற அவ்வைப்பாட்டியை
"பழம் சுடுதோ?"என்று குறும்பாய் வினவிய
குழந்தையே ! எனை ஆள வா!


கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!




"சரவணபவா" என்று தூய மனத்தோடு
ஒரு முறையே அழைத்தாலும்
சிறு குறையுமின்றி காத்தருள் புரிந்திடும்
கருணாகரா! எனை ஆள வா!

கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!

Sunday, May 20, 2012

சண்முகா!வா!

( "சுந்தர் கான்ஹா"என்று தொடங்கும் AOL பஜன் மெட்டில்
 பாடுவதாக (?)எண்ணி அந்தமெட்டை (பாடாப்படுத்தி) ஒருவழியாக்கி
 இணைத்து விட்டேன்;பாட்டைக் கேட்பவர்களுக்கு BEST OF LUCK !)

சங்கரிபாலா,சிங்கார வேலா!
சம்புகுமாரா,சூரசம்ஹாரா!
பழனிமலை வாசா,கந்தா,பாபவினாசா!
பழமுதிர்ச்சோலை வாழும்குமரேசா

நீலகண்டன் நுதல்விழியில் தோன்றியமுருகா,
நீலமேகச்யாமளனாம் மாயவன்மருகா!

சண்முகா !சிவகுகா!

வண்ணமயில் ஏறி வா!
வள்ளியின் நாயகா!
வெள்ளிவேல் ஏந்திவா!

சங்கரிபாலா,சிங்கார வேலா!

சம்புகுமாரா,சூரசம்ஹாரா!


அபிராமவல்லியின் ஆருயிர்மைந்தா!
அயனின் அஹங்காரந்தனை அடக்கியகந்தா!

சண்முகா !சிவகுகா!

வண்ணமயில் ஏறி வா!
வள்ளியின் நாயகா!
வெள்ளிவேல் ஏந்திவா!

சங்கரிபாலா,சிங்கார வேலா!

சம்புகுமாரா,சூரசம்ஹாரா!


ஆறுபடை வீடமரும் ஆறுமுகா,வா,
நீறணியும் நிர்மலனே,கார்த்திகேயா !வா!

சண்முகா !சிவகுகா!
வண்ணமயில் ஏறி வா!
வள்ளியின் நாயகா!
வெள்ளிவேல் ஏந்திவா!

சங்கரிபாலா,சிங்கார வேலா!

சம்புகுமாரா,சூரசம்ஹாரா!


சரவணபவா ஓம் முருகா,வா,
கருணாஸாகரா,குமரா,வா,
சரவணபவா ஓம் முருகா வா,
குறமகள் வள்ளியமுதா!வா!

சங்கரிபாலா,சிங்கார வேலா!

சம்புகுமாரா,சூரசம்ஹாரா!
பழனிமலை வாசா,கந்தா,பாபவினாசா!
பழமுதிர்ச்சோலை வாழும்குமரேசா



Sunday, May 13, 2012

அம்மா!அம்மா!


                       365/366 நாளும் "அம்மாதினம்" தான் !
ஆனாலும் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினமாகக்
கொண்டாடும்போது எனக்கும் நம் அன்னையைப்
பாடிக் கொண்டாடவேண்டும் என்று அடக்கமுடியாத ஆசை!மூன்றுமாதம் முன் "அம்மன் பாட்டு "வலையில் நான் எழுதி
சுப்பு ஐயாபாடிய "அம்மா!அம்மா!" பாட்டு
இன்றைய தினத்துக்குப்பொருத்தமாகத் தோன்றவும்
அப்பாட்டை இவ்வலையில் இன்று அளிக்கிறேன்!


                                               அம்மா!அம்மா!
( subbu sir sings:
   http://ammanpaattu.blogspot.in/2012/01/blog-post_26.html  )



"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

தாய்மையின் மேன்மை நீயே அம்மா,அம்மா!
பெண்மையின் மென்மை நீயே அம்மா,அம்மா!
மெய்ம்மையின் தூய்மை நீயே அம்மா,அம்மா!
புன்மை போக்கும் புடம் உந்தன் பதந்தானம்மா !


"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !


இதமான சுகநாதம் "அம்மா,அம்மா!"
இதயத்தின் சங்கீதம் "அம்மா,அம்மா!"
முதலான மதலைச்சொல் "அம்மா,அம்மா!"
நிதமெந்தன் நெஞ்செல்லாம் நீயே அம்மா!


"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில்
அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !


அன்பகமே!செண்பகமே!அம்மா,அம்மா!
அஞ்சுகமே!எனக்கபயம் !அம்மா,அம்மா!
நின் கழலில் நான் தஞ்சம் அம்மா,அம்மா!
நின் நிழலே என் மஞ்சம் அம்மா,அம்மா!


"அம்மா!அம்மா!"என்றுன்னை நான் அழைக்கையிலே -நெஞ்சில் அமுதத்தமிழ்ப் பாமலர் பூக்குதம்மா !

Friday, April 27, 2012

கந்தா!கேளென் குரல்!

 ( 'தோ ஆங்கே பாரா ஹாத்'என்ற படத்தில் வரும்
"ஏ மாலிக் தேரே பந்தே"என்ற லதாவின் கடவுள்
 பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தபோது
"பாரா ஹாத்"என்றால் பன்னிருகை என்று
 நினைவுக்குவரவே என்னையும் அறியாமல் 
அதே மெட்டில் முருகன்மேல் ஒரு பாட்டு 
எழுதிவிட்டேன்;அத்தோடு சும்மா இருக்க
முடியாமல் பாடியும் இணைத்துவிட்டேன்)

கந்தா!கேளென் குரல்!

 எந்தன்  மனத்தில் மண்டியதே  இருள்;
கந்தா!வருமோ  என் வாழ்வில்  பகல்?
கேளென் கெஞ்சும் குரல்;
தாளிலே தா புகல்;
நெஞ்சம்  நாடுதே நின்  திருத்தண்ணிழல்.

தீர்த்தத்தலங்கள்தன் பேரறியேனே;
ஆறெழுத்தன்றி  வேறறியேனே;
கூத்தன் நேத்திரத்திலே
பூத்த ஞானப்பூவே!
கார்த்திகேயா!கடைதேற்ற வா!
நீயோ வரம்பற்ற கருணைக்கடல்;
நானுன்  திருவடியிலே   சிறு துகள்;
கேளென் கெஞ்சும் குரல்;
தாளிலே தா புகல்;
நெஞ்சம்   நாடுதே நின்  திருத்தண்ணிழல்.

நீறணிந்து பணிந்தேன் உனை;
தேன் கலந்து படைத்தேன் தினை;
திற அருள்விழிதனை;
முறி என் முன் வினை;
நிழலாய் நில் நீ எனக்குத் துணை.
நானோ ஞானம்  இல்லாத  ஈனன் ;
மனதனபலமில்லாத   தீனன் ;
கேளென் கெஞ்சும் குரல்;
தாளிலே தா புகல்;
நெஞ்சம்  நாடுதே நின்  திருத்தண்ணிழல்.



Monday, April 23, 2012

கந்தனை வந்தனை செய்வோம்!



கந்தனை வந்தனை செய்வோம்!

(வள்ளிக்கணவன் பேரை ..மெட்டில் சுப்பு ஐயா

பாடுவதைக் கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)



பிள்ளையார்க்கிளையோனை
கள்ளங்கபடமற்ற
உள்ளத்தால் வணங்கிநின்றால் ..வள்ளல்
துள்ளி வருவானடி ..அருளை
அள்ளிப்பொழிவானடி!


காத்யாயினி சுதனை
மாத்திரம் மனத்திலே
தோத்திரம் செய்தபின்னால் ..வேறு
சாத்திரம் பார்க்கணுமோ?..தீர்த்த
யாத்திரை தேவைதானோ ?


அரன்மகன் முருகனை
ஒருமுறை உளமார
``சரவணபவா!" என்றே அழைத்தால்
வரந்தர வருவானடி ,...அபய
கரங்காட்டி அருள்வானடி !


தேவசேனா பதியாம்
சேவல் கொடியோன்பேரை
நாவில் நிறுத்திவிட்டால்..தீரா
தீவினை தீருமடி,...பண்ணிய
பாவங்கள் பொசுங்குமடி!


மாயோன்மருகன் நாமம்
தூயமனத்துடனே
ஓயாமல் ஒதிநின்றால் ..வேலன்
நேயமாய் நெருங்கிடுவான் ..நம்மைத்
தாயென அணைத்திடுவான் !


அப்பனுக்குப் பிரணவத்தின்
ஒப்பற்ற பொருளினை
செப்பிய சுப்பனவன்....மந்திரம்
தப்பாமல் ஜெபித்திருந்தால்--முருகன்
எப்போதும் துணை இருப்பான் .


அந்திமகாலம் நம்மை
சொந்தங்கள் `சீ..' என்றாலும்
பந்தங்கள் `போ..' என்றாலும் ..புகல்தர
கந்தனிருக்கானடி.......அவனையே
சிந்தித்திருப்போமடி ,....வேலனையே
வந்தித்திருப்போமடி!










































Friday, April 13, 2012

புத்தாண்டுக் கும்மி

புத்தாண்டுக் கும்மி

நந்தன ஆண்டு பிறந்ததடி ! -தமிழ்ச்
சிந்தொன்று நெஞ்சில் சுரந்ததடி !
தெய்வங்களின்  புகழ்  இசைத்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடி கும்மியடி!


தொடங்கியவை நடந்தேறுமடி-ஏதும்
தடங்கலின்றி நிறைவேறுமடி !
 தந்தனைப் போற்றித்  துதித்தபடி,-பெருந்
தொந்தனைப் போற்றித் துதித்தபடி-இரு
 கைதட்டிக்   கொண்டாடி கும்மியடி !
கைதட்டிக் கொண்டாடிக் கும்மியடி !

கருணைமுகில் மழை பொழியுமடி-மன
மலங்கள் அழிந்து ஒழியுமடி!
கந்தனை வந்தனை செய்தபடி -உமை
மைந்தனை வந்தனை செய்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி ! 
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !

அஞ்செழுத்து அருள் புரியுமடி -நமது
நெஞ்சத்தில் நிம்மதி நிறையுமடி!
ஈசனைத்தோத்திரம் செய்தபடி -உமை
நேசனைத்தோத்திரம் செய்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !

மெஞ்ஞானப்பேரொளி பாயுமடி-மன
அஞ்ஞானப் பேரிருள் மாயுமடி
சாமளையைப் பாடித்துதித்தபடி -அபி
ராமியைப்  பாடித்துதித்தபடி   -இரு                
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !

பேரருள் வெள்ளம் பெருகுமடி-கலி
தீர்த்து அபயம் அருளுமடி!
நாரணனை நெஞ்சில் நினைத்தபடி-பரி
பூரணனை நெஞ்சில் நினைத்தபடி -இரு  
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !

மங்களம் எங்கெங்கும்  பொங்குமடி-அது
மங்காமல் என்றென்றும் தங்குமடி!
திருமகள் பெருமையை இசைத்தபடி-செல்வம்
அருள்பவள் பெருமையை இசைத்தபடி-இரு  
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !

கலைகளெல்லாம் வளர்ந்தோங்குமடி-நாம்
கடையோர் எனும் நிலை நீங்குமடி!
பாரதியின் புகழ் இசைத்தபடி -ஞான
வாரிதியின் புகழ் இசைத்தபடி -இரு                    
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !




நந்தன ஆண்டு பிறந்ததடி ! -தமிழ்ச்

சிந்தொன்று நெஞ்சில் சுரந்ததடி !
தெய்வங்களின் புகழ் இசைத்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடி கும்மியடி!
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !






















































Tuesday, April 10, 2012

சுப்ரமண்யம் வந்தேஹம்

                    (சுப்பு ஐயா 

                    http://kandhanaithuthi.blogspot.com/          என்ற லிங்கில்
    பாடக் கேட்டு ரசித்தபடி  பாட்டை வாசிக்கவும் :) 




'கிருஷ்ணம் வந்தே' என்ற A.O.L பஜன் மெட்டைத் தழுவி

 பாடுவதா  நெனச்சிண்டு 'கீச்''கீச்'சி இருக்கேன்! பொறுத்தார் 

பூமி  ஆள்வார்!  [என்பாட்டைக் கேட்பார்  ஏமி ஆள்வார் ??? :)) ]
                    -----------------------------------------------------------------------

சுப்ரமண்யம் வந்தேஹம்

ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தேஹம்

ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தே
பரமேஸ்வரி ப்ரியநந்தனா!சுரகுஞ்சரி மனமோஹனா!
வருவாய்,அருள்வாய் மயில்வாகனா!
ஏரகத்தோனே !வேல்முருகா! நாராயணனின்  திரு மருகா!
சூரசம்ஹாரா!சிவகுகா!ஆறிருகண்ணனே!ஆறுமுகா!
ஸ்கந்தம்வந்தேசுப்ரமண்யம்வந்தேஹம்
ஸ்கந்தம்வநதேசுப்ரமண்யம்வந்தே

எந்தன் சிந்தைபுகுந்து ,சந்தமொன்றைத்தந்து
விந்தைபுரிந்த கந்தா!...அனந்தா!
உந்தன்பாதாரவிந்தம் எந்தன் இல்லம்பதிய
வந்தேநீ தரிசனம் தா ,..தினம் தா..
சிந்தைதனை மயக்கும் மந்தஹாசம் சிந்த
வந்தேநீ தரிசனம்தா
ஓங்காரம் விளக்கிய உமைபாலா!
காங்கேயா!கதிர்வேலா!..
ஸ்கந்தம்வந்தே சுப்ரமண்யம் வந்தேஹம்

ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தே

எந்தன்சிந்தை புகுந்து சந்தமொன்றைத்தந்து
விந்தைபுரிந்த கந்தா! ..அனந்தா!
இந்திரன்செல்வியோடும் ,சுந்தரவள்ளியோடும்
வந்தேநீ தரிசனம்தா ..தினம்தா
உந்தன் திருமந்திரம் எந்தநேரமும் என்
சிந்தையில் ஒலிக்கவரம் தா
ஓங்காரம் விளக்கிய உமைபாலா!
காங்கேயா!கதிர்வேலா!..
ஸ்கந்தம்வந்தே சுப்ரமண்யம் வந்தேஹம்

ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தே









.

Wednesday, April 4, 2012

ஆறுமுகன் அருள்வான்!




ஆறுமுகன் அருள்வான்!
 (கீழுள்ள லிங்குகளில் சுப்பு ஐயாவும் மீனாம்மாவும்
       ' காவடிச்சிந்து 'பாடக்கேட்டு ரசிக்கலாம்!)

http://youtu.be/OB9A3Z4wlNU


OR

http://kandhanaithuthi.blogspot.com/


அன்னை அபிராமி தனயன்,-ஒற்றைத்
தந்தக்கணபதிக்கிளையோன் ,-கந்தன்
பொன்னடிபணிந்திடும் தன்னடியாருக்கு
பன்னிருகையாலே அருள்வான்,-பொங்கும்
இன்பத்தை எந்நாளும் பொழிவான் ;

அன்பாய் அருள்வான் ,இன்பம் பொழிவான்!
அன்பாய் அருள்வான் ,இன்பம் பொழிவான்!

கயிலாயரின்மகன் முருகன்,--வண்ண
மயிலிறகணிவோனின் மருகன்,--கந்தன்
பயபக்தியாய்வந்து பதமலர் பணிவோரின்
துயரங்கள் யாவையும் துடைப்பான் ,--சுக
மயமான வாழ்வினைக் கொடுப்பான்.


துயர் துடைப்பான்,சுகங்கொடுப்பான் ,
துயர் துடைப்பான்;சுகங்கொடுப்பான்!

இந்திரன்மகள் மனவாசன்--தூய
அன்புக்குறவள்ளி நேசன் --கந்தன்  
சிந்தையிலே ஆறெழுத்து மந்திரம் ஜெபிப்போரின்
முந்தைவினைகளையறுப்பான் ,--பெற்ற
தந்தையெனத் துணை இருப்பான் ,


வினையறுப்பான்,துணை இருப்பான்,
வினையறுப்பான்,துணை இருப்பான் !

  (சகிப்புத்தன்மையை பரிசோதித்துக் கொள்ள  விரும்புவோர்
 என் குரலிலும்பாட்டைக் கேட்கலாம்  கீழே! )