Thursday, March 24, 2011

ஸாயி நாமாவளி 

    ஸாயி  நாமாவளி
(1) ஸாயியே கணேசனின் அவதாரம் ;
விக்னம் விலக்கிடும் அவர் நாமம்.

பக்திப்பெருகச்சொல்லு,ஸாயி கணேசா!
சத்தியமூர்த்தியே,ஸாயி கணேசா!
சோகவிநாசகா,ஸாயி கணேசா!
சீரடிவாசா,ஸாயி கணேசா!

(2)ஸாயியே சரஸ்வதியின் அவதாரம்;
மெய்ஞானம் தரும் அவர் நாமம்.

தேனொழுகச் சொல்லு,ஸாயி வீணாபாணி!
சகலகலாவல்லி,ஸாயி கலைவாணி!
வாகீச்வரியே,ஸாயி சரஸ்வதி!
சீரடிவாசினி,ஸாயி பாரதி!

(3 )ஸாயியே பிரம்மனின் அவதாரம்;
ஆக்கத்திறனளிக்கும் அவர் நாமம்.

படைப்பின்கடவுளே ஸாயி பிரம்மதேவா!
நான்முகக்கடவுளே,ஸாயி வாகீசா!
நான்மறைநேசா,ஸாயி வாணிநாதா!
சீரடிவாசா!ஸாயி வினோதா!

(4 )ஸாயியே அரியின் அவதாரம்;
நலம் யாவும் நல்கும் அவர் நாமம்.

மெய்மறந்தே சொல்லு,ஸாயி ரகுராமா!
ராதா ரமணா,ஸாயி கன்ஷ்யாமா!
ஆண்டளையாட்கொண்ட  ஸாயி ரங்கநாதா!
சீரடிவாசா,ஸாயி நவநீதா!

(5 )ஸாயியே அரனின் அவதாரம்;
முக்தியளித்திடும் அவர் நாமம்.

பரவசமாய்ச் சொல்லு,ஸாயி பரமேசா!
குமார ஜனகா,ஸாயி ஜகதீசா!
முக்கண் முதல்வா,ஸாயி மகேசா!
சீரடிவாசா,ஸாயி நடேசா!

(6 )ஸாயியே குகனின் அவதாரம்;
நோய்நொடி  நீக்கும்  அவர் நாமம்.

மனமுருகச் சொல்லு,ஸாயி முருகேசா!
சரவணபவ ஓம் ஸாயி குமரேசா!
சுரமகள் நேசா,சாயிவள்ளீசா
சீரடிவாசா,ஸாயி சர்வேசா!

(7 )ஸாயியே சத்குருவின் அவதாரம்;
நற்கதியளிக்கும் அவர் நாமம்.

அனுபவித்தே சொல்லு,ஸாயி குருநாதா!
அனுதினமும் சொல்லு,ஸாயி குருநாதா!
புனிதனின் பேர்சொல்லு,ஸாயி குருநாதா!
கண்கண்டகடவுளே ,சாயிகுருனாதா!
கலியுகவரதா,ஸாயி குருநாதா!
கலங்கரை விளக்கே!ஸாயி குருநாதா!
(ஸாயியே சத்குருவின்.....)
Tuesday, March 1, 2011

மஹாசிவராத்திரி ஸ்பெஷல்

கீழே உள்ள நடராஜர் பற்றிய பாட்டு பதினெட்டாம் நூற்றாண்டில்  பாபவிநாசமுதலியார் காம்போதிராகத்தில் பாடிய அந்தகாலத்து பிரசித்தி பெற்ற பாட்டென்று தெரியவருகிறது! (நன்றி:ர.கணபதியின் "தெய்வத்தின் குரல்-7 )       
சுவாமியிடம் அழுது மூக்கைச்சிந்தியபடி[என்னைப்போல்]  பாடுவதுதான் பக்தி என்றில்லாமல்,ஸ்வாதீனத்தொடு அவ்னைக் கேள்விகேட்டுக் குடைவதும் பக்திதான் என்று நமக்குத்தெரிவப்பதுடன் படிக்கையில் ஆனந்தம் தருவதாகவும் இருக்கிற இப்பாட்டை பரமாச்சாரியாரின்  எளிமையான  விளக்கத்துடன்சிவராத்திரிக்காகப்ரசுரிக்கிறேன்;அனுபவித்தபடி  ஆதிரையானை துதிப்போம் வாங்க!
 பல்லவி         

" நடமாடித்திரிந்த  உமக்கிடதுகால்  உதவாமல்
 முடமானதேனென்று சொல்லுவீரையா!"

"நடனமாடியபடி சுற்றிச்சுற்றித் திரிந்த நீ இப்படி  ஒரே போஸில் ஒரு காலைத் தூக்கியபடி ஏன் எத்தனையோ வருஷமா  நின்னுட்டே ? ரெண்டு  காலாலும்  ஜதி போட்டு டான்ஸ் ஆடவேண்டியவன் ஏன்  இடது கால் வழங்காமல் தூக்கிவைத்து இருக்கும்படி ஆயிடுத்து?"என்று கேட்கிறார் முதலியார்.அனுபல்லவி  

" திடல் மேவும் தில்லை நகர் மருவு பேரானந்தச்
சுடை விரித்தாடினவா! தேவசிற்சபை   அறிய ..."
             

" திடல் மேவும் தில்லை நகர் மருவு பேரானந்தச்
  சுடை விரித்தாடினவா! தேவசிற்சபை   அறிய ..."

"சமவெளியான சிதம்பரத்தில் சொந்த ஊர் போலக் குடிகொண்டு  எங்களுக்கெல்லாம் புரிபடாத பேரானந்தத்தில் திளைத்தபடி  உனக்குமட்டுமே  விசேஷமான செஞ்சடையை இருபக்கமும் விரித்தாடுபவனே!ஞான ஒளியால் பிரகாசமாக  இருக்கும் ஞானாகாசத்தையே நாம் பார்க்கும்படி சிற்சபையாக்கிக் கொண்டு,தரிசிக்கவரும் யாவரும் அறிய" என்று பொருள்பட அனுபல்லவி பாடியானபின் காலைத்தூக்கியதன் காரணம் கேட்டுக்கேட்டுக் குடைய ஆரம்பிக்கிறார் சரணத்தில்!
சரணம்

"திருநீற்றைச்சுமந்தீரோ,நெருப்பானமேனிதனில்:

  சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ?"
       


"சுவாமி சந்தனத்துக்குபதிலா சுடுகாட்டு விபூதியத்தானே தேஹம்முழுக்க பூசிக்கறான்?ஏற்க்கனவே அவன்  அக்னியாய் இருப்பவன்! "என்று பக்தர்கள் உனக்கு அபிஷேகம் பண்ணும் விபூதியில் ஜில்லிப்பு சரக்குகள்  சேர்த்துவிடவே   ,உனது  சூட்டு உடம்பில்   ஜில்லிப்புச் சேர்ந்ததால் கோளாறாகி, உனக்கு சீதளமேறி    அதனாலேயே  உன் இடதுகால் வாதக்கால் ஆகிவிட்டதோ?" என்று நிந்தாஸ்துதியாக காரணம் கேட்டமுதலியார்  சரணத்தின் அடுத்தவரியிலும்  அவ்வாறேகேட்கிறார் :

 "ஒருமையுடன் மார்க்கண்டர்க்கு உதவியாய் மறலி விழ
   உதைக்கச் சுளுக்கேறி உண்ட குணமோ?"யமன் (மறலி)பிடிக்கவந்ததும்  மார்க்கண்டேயன்,'நீயே கதி'  என்று உன்னைக் கட்டிக்கொள்ளவும்,அவனை ரட்சிக்க   வேண்டுமென்று  ஒரே மனத்தோடு யமனை அந்த இடது காலால் நீ ஓங்கி உதைத்து வதைத்தபோது ,உதைத்த அந்தக்கால் நன்றாகச்சுளுக்கிக் கொள்ள,அதனால்  உண்டான  பாதிப்பால் அந்தக்கால் முடமே ஆகிவிட்டதோ?  
அடுத்தவரியில் மேலும் ஒருகாரணம் குறிப்பிடுகிறார்  முதலியார்:

 "பரவைதன் தெருவாசற்படி   இடறிற்றோ?"

 இந்த வரியில் குறிப்பிடும் பரவை???

  கதை இதோ!
சுந்தரருக்கு[நாயனார்]கல்யாணம் நடக்கும்போது கிழ பிராமணனாய் நுழைந்த சிவன், "இவன் எனக்கு அடிமை; கல்யாணம் பண்ணிக்க உரிமை இவனுக்கில்லை"  என்று கூறி பொய்ப்பத்திரம் காட்டி,முடிவில் தன்னையே சுந்தரருக்குக்காட்டிடவும் ,அவர் தம்மைச் சிவனுக்கு'மீளா  அடிமையாய் ' ஆக்கிகொண்டார்.இப்படி அவரது  கல்யாணத்தை  நிறுத்தியவரே,திருவாரூரில் பரவை என்ற புனிதையின்மேல்  பிரேமை கொள்ள வைத்தார்! இது போதாதென்று திருவொற்றியூரில்   கன்யாமடத்திலிருந்த சங்கிலி என்ற பெண்மேலும்  பிரேமை ஏற்படுத்திவிட்டார்!!சங்கதி தெரிந்து பரவை  வெகுண்டெழ, சுந்தரர் தயங்காமல் சிவனிடம் போய், "நீதான் பரவையிடம்  தூது போய் சமாதானப்படுத்தி  ஊடல் தீர்க்கணும்"என்றார்.  சிவனும் ஒப்புக்கொண்டு  புறப்பட்டார்!  "வேக வேகமா பரவை வீட்டுக்குப்   போனப்ப,,அவள் வீட்டு  வாசப்படிஇடறி   விழுந்தாயோ? அப்படி விழுந்ததால் இடதுகால்  முடமாயிடுத்தோ?" என்று அந்த வரியில் முதலியார்  அசாத்தியத் துணிச்சலோடு ச்வாமியைக்கேட்கிறார்!  இப்படி ச்வாதீனமாக்கேட்டாலும் இவருக்கு உள்ளுக்குள்ளே  எவ்வளவு உருக்கமயமான பக்தி என்று அடுத்தவரி காட்டிக் கொடுத்துவிடுகிறதே! 

"எந்தன் பாபமோ , என் சிவனே ?"
இரண்டே வார்த்தையில்[எந்தன் பாபமோ] "நான் பண்ணின  மகா பாபங்களால்தான்,எனக்கு இப்படி ஒருமனக் கஷ்டம்  உண்டாகணுமென்றே உன்காலை முடமாக்கிகொண்டு காட்டுகிறாயா?"என்று பொருள்படக் கேட்கிறார் .நம்  நெஞ்சை தொடுமாறு "என் சிவனே"என்று தன்  உடைமைபோல் சிவனை அழைப்பது மேலும் அழகு .

"எந்தன் பாபமோ என் சிவனே?
 மூவர்க்கும் முதல்வனென
  நடமாடித்திரிந்த .....,,,,,,,,,,,,,,,"


என்று அந்தச் சரணம் பல்லவியோடு முடிகிறது.

"என் சுவாமியே !நான் பண்ணின பாபத்துக்காக எனக்கு  மனக்கஷ்ட மென்ற தண்டனை தரணுமேன்றே மும்மூர்த்திகளிலும் முதல்வனான நீ உன் காலை முடமாக்கிகொண்டாயா?" என்று கேட்டவர் அடுத்த  சரண  ஆரம்பத்தில் பாபவினாசமாவதைச் சொல்லி  ஒரு கேள்வி கேட்கிறார்

சரணம்-2

"பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசனமாகும்
பரமபதம் இதுவென்று தூக்கி நின்றததுவோ?"

"பூர்வகர்மவினாலேற்பட்ட பாபம் மகாபக்தர்களையும் பழிவாங்கிக் கொண்டிருக்க, அப்பாவங்களை நாசம் பண்ணும் பரமபதம் இதுதான்;இதைப்பிடிச்சிக்கோ'' என்று  நீ அந்தக்காலை எடுத்துத் தூக்கிக் காட்டுகிறாயா?" என்று கேட்கும் முதலியார்,"இப்படி நீ காட்டுவதைத்தான்  நான்  முடமானதாக மிஸ்டேக் பண்ணிக் கொண்டேனோ?" என்று கேட்காமல் கேட்கிறார்.  காவிய அழகில் இதையும் மிஞ்சுவதாக இன்னொரு தத்வ சத்தியத்தை அடுத்தகேள்வியாகப் போடுகிறார். ''உன்னுடைய வாமபாகம் பூராவும் அம்பாளுடையதானதால்  இந்தத்தூக்கிய திருவடியும் அவளைச்சேர்ந்ததுதான்!அந்த ம்ருதுவான பாதத்தை நாட்ய அரங்கத்தின் கெட்டித்தரையில் வைத்தால் நொந்துபோகுமே என்றுதான் கீழே வைக்காமல் தூக்கிக் கொண்டிருக்கிறாயா?" என்று பொருள்பட 

 "சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே
   தரையில் அடிவைக்கத் தயங்கி நின்றததுவோ?"

என்று பாடுகிறார் முதலியார்.


 
நிஜக்காரணங்களில் இன்னொன்றைக் கேள்வி  ரூபத்தில் தெரிவிக்கிறது இச்சரணத்தின் முடிவான வரி.:
"சத்யா லோகாதிபதி தாளத்திற்கு ஏற்க நடம்
  தாக்கியே ஒரு காலைத் தூக்கி நின்றததுவோ?"
சத்யலோகத்தின் அதிபதியான பிரம்மாதான் இந்த டான்ஸ் கச்சேரிக்கு நன்றாக அறைந்து தாளம் போடுபவர்.அதற்கேற்ப இவர்   ஆடுகையில்,"ஜனங்கள் கண்குளிர தரிசனம் பண்ணும்படி இதை ஆக்கித்தரணும்" என்று அந்தக் கருணாநிதிக்குத் தோன்றவும்,உடனே அந்தக்ஷணத்தில் என்ன போஸில் இருந்தாரோ  அதையே ஒரு ஸ்நாப்ஷாட் எடுத்துப்படமாக்கியதுபோல் ஒருசிலையாகி நின்று காட்டுகிறார்!ஆனாலும் வெறும் சிலையாக இல்லாமல் ஜீவக்களை ததும்பும் சிவரூபமாய்க் காட்டுகிறார். "இப்படி பிரம்மாவின் தாளத்துக்கேற்ப நீ ஒரு கணம் காலைத்தூக்கியதே,உன்கால் ஊனமாகிவிட்டதாக என்னை நினைக்க வைத்து விட்டதோ?" என்று முதலியார் கேட்கிறார் .
ஆட்டக்காரனையே கேள்விமேல் கேள்வி கேட்டு ஆட்டிவைக்கும் முதலியாரின் சுவாதீன அன்பு   பாட்டின் ஒவ்வொரு வரியிலும் ஒரு தேனருவியாய்ப் பெருகி ஓடுவதைக் கேட்டு அனுபவிக்க யாரிடமாவது ஒலிப்பதிவு உண்டா? (சூரிசார் அபயக்கரம்  காட்டுவதுபோல் இருக்கே?  நீங்கதான் சார் என் கை கொடுக்கும் தெய்வம்!
அட்வான்ஸ் நன்றி சார்!!)

Saying of the Day

There was an error in this gadget