Monday, April 23, 2012

கந்தனை வந்தனை செய்வோம்!



கந்தனை வந்தனை செய்வோம்!

(வள்ளிக்கணவன் பேரை ..மெட்டில் சுப்பு ஐயா

பாடுவதைக் கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)



பிள்ளையார்க்கிளையோனை
கள்ளங்கபடமற்ற
உள்ளத்தால் வணங்கிநின்றால் ..வள்ளல்
துள்ளி வருவானடி ..அருளை
அள்ளிப்பொழிவானடி!


காத்யாயினி சுதனை
மாத்திரம் மனத்திலே
தோத்திரம் செய்தபின்னால் ..வேறு
சாத்திரம் பார்க்கணுமோ?..தீர்த்த
யாத்திரை தேவைதானோ ?


அரன்மகன் முருகனை
ஒருமுறை உளமார
``சரவணபவா!" என்றே அழைத்தால்
வரந்தர வருவானடி ,...அபய
கரங்காட்டி அருள்வானடி !


தேவசேனா பதியாம்
சேவல் கொடியோன்பேரை
நாவில் நிறுத்திவிட்டால்..தீரா
தீவினை தீருமடி,...பண்ணிய
பாவங்கள் பொசுங்குமடி!


மாயோன்மருகன் நாமம்
தூயமனத்துடனே
ஓயாமல் ஒதிநின்றால் ..வேலன்
நேயமாய் நெருங்கிடுவான் ..நம்மைத்
தாயென அணைத்திடுவான் !


அப்பனுக்குப் பிரணவத்தின்
ஒப்பற்ற பொருளினை
செப்பிய சுப்பனவன்....மந்திரம்
தப்பாமல் ஜெபித்திருந்தால்--முருகன்
எப்போதும் துணை இருப்பான் .


அந்திமகாலம் நம்மை
சொந்தங்கள் `சீ..' என்றாலும்
பந்தங்கள் `போ..' என்றாலும் ..புகல்தர
கந்தனிருக்கானடி.......அவனையே
சிந்தித்திருப்போமடி ,....வேலனையே
வந்தித்திருப்போமடி!










































2 comments:

  1. Thanks for your email.
    The song is very good indeed.
    I have sung the same in the same mettu as suggested by you and placed in in my usual blog
    http://kandhanaithuthi.blogspot.com
    subbu rathinam

    ReplyDelete
  2. subbusir,
    soooooooppper;thanks infinite times

    ReplyDelete