Wednesday, August 31, 2011

ஷோடசநாம மகிமை




ஷோடசநாம மகிமை



வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                          சுமுகா! உந்தன் சுந்தரநாமம்
                         செப்பிட சித்திக்கும் ஞானப்ரகாசம்;
                         ஏகதந்தா! உன் இணை இல்லா நாமம்
                         இசைப்போர் உள்ளத்தில் பொங்கும்பரவசம்.!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                           கபிலா! உந்தன் கனிரசநாமம்
                           கூறிடக்கிடைக்கும் உன் கருணாகடாக்ஷம்;
                           கஜகர்ணா! உன்கவின்மிகுநாமம்
                           பாடிடக்கூடிடும் முடிவினில் மோக்ஷம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                            லம்போதரா!உன் நிர்மல நாமம்
                            நவின்றிட நிலைத்திடும் நித்யானந்தம்;
                           விகடா!உந்தன் உன்னத நாமம்
                           உரைப்பவருள்ளத்தில் உறைந்திடும் சாந்தம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                              விக்னராஜா!உன் நிகரில்லாநாமம்
                              பயின்றிடக்கரைந்திடும் பண்ணிய பாவம்;
                              விநாயகா!உன் இன்சுவைநாமம்
                              மொழிந்திட முறிந்திடும் முன்வினை யாவும்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                தூமகேது!உன் தேவாம்ருத நாமம்
                                தோத்தரித்தாலுண்டு துக்கநிவாரணம்;
                                கணாத்யக்ஷா!உன் கல்கண்டுநாமம்
                               ஒன்றே விக்னவிநாச காரணம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 பாலச்சந்த்ரா!உன் புண்ணியநாமம்
                                 பயின்று பணிந்தோம் உன்மலர்ப்பாதம்;
                                 கஜானனா!உன் அருமை நாமம்
                                அதற்கிணை ஒன்றெனில் அது சதுர்வேதம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 வக்ரதுண்டா!உன் ஒப்பில்லா நாமம்
                                 ஓதுவோர் வாழ்வினில் ஒழிந்திடும் தொல்லை;
                                 சூர்ப்பகர்ணா! உன் சுப நாமம்
                                 சொல்பவர்க்கென்றும் சோகமே இல்லை!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 ஹேரம்பா!உன் ஜகம்புகழ்நாமம்
                                 ஜெபிப்போர் குறைகள் யாவையும் தீரும்;
                                 ஸ்கந்தபூர்வஜா!உன் திருநாமம்
                                 ஸ்மரிப்போர் வேண்டியவை நிறைவேறும்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !









Friday, August 5, 2011

தாயே!தாள் பதிப்பாய்!


தாயே!தாள் பதிப்பாய்!
[கலாவின் குரலில் இந்தபாட்டைக்கேட்டு மகிழுங்கள் ]

மின்னல் முகிலிடையே பளிச்சிடுவதுபோல்


கன்னங்கரு முடியிடையே வகிடு மின்ன,


கன்னல்கரத்தாளாய்க் காணும் அபிராமி!


உன்பொன்னடி சென்னியில் பதித்துவிடு!




விடம் விழுங்கிய விடையவன் மேனியிலே


இடப்பாகம் அபகரணம் செய்தவளே!


மதங்கன் மகளே!உந்தன் மலரடியால்


மடமதியேன் சென்னியை மிதித்துவிடு!




அத்தையாய்க் குறமகள் உறவாடுகிறாள்!


தத்தையும் தொற்றிக்கொண்டதே உன் தோளில்!


சொத்தையோ,சுக வாழ்வையோ வேண்டவில்லை;


பக்தைமேலுந்தன் தாள் பட்டால் போதுமம்மா!




அன்று பிதற்றிய பட்டருக்குதவிடவே


விண்ணில் முழுமதி காட்டி நீ வியக்கவைத்தாய்!


இன்று பாட்டென எண்ணிப் பிதற்றி நிற்கும்


எந்தன் சென்னியில் தாயே!தாள் பதிப்பாய்!