Tuesday, February 17, 2015

அரனின் அருளே அரண்

அரனின் அருளே அரண் 
சந்திர சேகராஷ்டகத்தின்  இனிமையான மெட்டில்
பாடும்வகையில் இந்த பஜனைப்பாட்டை எழுதி இருக்கிறேன் ;
இது தமிழாக்கம் அல்ல   ] 
                                                      
                                   


 அரவணைக்கும் அரனின் பஞ்சாக்ஷரத்தையோதுமன்பரை,
அரவணைக்கும் பரமனருளே அரணுமாகிக்காக்குமாம்!

லம்போதரனை நமக்களித்த
                  சிவனின் சன்னதி சேருவோம்;
 "சம்போ சிவ சம்போ"என்றே
                 ஜெபித்து அவனருள் கோருவோம்;
அம்பலத்தே ஆடும் அரனின்
                அம்புயப்பதம் பற்றுவோம்;
 நம்புமடியார் நலனைக்காக்கும்
                 நாதனாலயம் சுற்றுவோம் .
                       (அரவணைக்கும்..)

 மதிமயக்கி மோகமூட்டிட
               மலர்க்கணைகளை ஏவிய
மதனின்சதியால் மௌனம்கலைய
               வெகுண்டெழுந்து சீறியே,
 நுதல்கண்ணால் ரதிபதியை எரித்த
               ஈசன்லீலையை எண்ணுவோம்;
முதலும் முடிவும் எதுவுமற்றவன்
               பதத்தைப்பூஜை பண்ணுவோம்.
                                   (அரவணைக்கும்..)

தோகைமயிலோன் தந்தை சோம
                     சேகரன் தாள்தழுவுவோம்;
 நாகபூஷணன் பதத்தினை நம்
                       நயனநீரால் கழுவுவோம்;
தேகமெங்கும் நீறுபூசும்
                       நாதனருளைப்பருகுவோம்;
 ரோகம்நீக்கும் ரிஷபவாகனன்
                      கிருபையை எண்ணி உருகுவோம்.
                                             (அரவணைக்கும்..)

 கையில்கனலை ஏந்தும் கயிலை
                  நாதன்  தாளினைப்போற்றுவோம்;
மெய்யில்பாதியை மனைவிக்கீந்தவன்
                  மகிமையைப்பறை சாற்றுவோம்;
வையமுய்ய நஞ்சை உண்டவன்
                  நிமலபாதம் சேருவோம்;
ஐயனின் ஐந்தெழுத்து மந்திரம்
                 ஓதியே கடைதேறுவோம்;
                                     (அரவணைக்கும்..)

 மங்களந்தரும் மங்கைப் பங்கனின்
                      பங்கயப்பதம் நாடுவோம்;
 திங்கள்தங்கிடும் சடையனாம் சிவ
                     சங்கரன் புகழ்பாடுவோம்;
 பொங்கும் கங்கையைத்தலையில் தாங்கிய
                      லிங்கரூபனை வாழ்த்துவோம்;
 செங்கண்மால் திருத்தங்கையின்பதி
                         தாளிலே தலைதாழ்த்துவோம்;
                                                      (அரவணைக்கும்..)
    

Friday, April 19, 2013

ஸ்ரீசாயிராமநவமி பஜன்


சாயி இருக்க பயமேன் ?

சாயி இருக்க ,சாயி இருக்க,
 சாயி இருக்க பயமேன் ?

சாயி இருக்க ,சாயி இருக்க,
 சாயி இருக்க பயமேன் ?

 தஞ்சம் என்றே சரண் புகுந்தோர்க்கு
அஞ்சேல் என்றே அபயம் அளிக்கும்
சாயி இருக்க ,சாயி இருக்க,
சாயி இருக்க பயமேன் ?


 
வேம்படிநிழலில் காட்சி அளித்து
இடிந்தமசூதியில் எளிமையாய் வாழ்ந்த

சாயி இருக்க ,சாயி இருக்க,
சாயி இருக்க பயமேன் ?

 செங்கல்லைத்தன் தலையணையாக்கி
கந்தல்கோணியில் படுத்த பக்கிரியாம்

சாயி இருக்க ,சாயி இருக்க,
 சாயி இருக்க பயமேன் ?


 
திருகையால் கோதுமை மாவை அரைத்து
விடநோய்நீக்கி ஜனநலம் காத்த

சாயி இருக்க ,சாயி இருக்க,
 சாயி இருக்க பயமேன் ?

நெருப்புக்குண்டமாம் தூனியின் உதியை
திருநீறாக அளித்து ரக்ஷிப்பவராம்

சாயி இருக்க ,சாயி இருக்க,
 சாயி இருக்க பயமேன் ?

நீரினை ஊற்றி தீபத்தை ஏற்றி
பாரெங்கும் ஞான ஒளியைப்பரப்பிய 

சாயி இருக்க ,சாயி இருக்க,
சாயி இருக்க பயமேன் ?
 

 சித்தமலமகற்றி பக்திவழிகாட்டி
முக்தி அளித்திடும் தத்தாத்ரேயராம்

சாயி இருக்க ,சாயி இருக்க,
 சாயி இருக்க பயமேன் ?

 அன்பரின் முன்னைவினைகள் முறித்து
 துன்பம்யாவும் துடைக்கும் துணைவராம்

சாயி இருக்க ,சாயி இருக்க,
 சாயி இருக்க பயமேன் ?

 சுயநலமின்றி சேவைபுரிவோரின்
 துயரங்கள் போக்கி அருள்புரிபவராம்

சாயி இருக்க ,சாயி இருக்க,
 சாயி இருக்க பயமேன் ?


தீனரைத்தாக்கும் ஈனரைத்திருத்தி
ஞானம் ஊட்டி நல்வழி காட்டும் 

சாயி இருக்க ,சாயி இருக்க,
 சாயி இருக்க பயமேன் ?

 இனம் மதம் மொழி எனும் பேதங்களின்றி
அனைவர்க்கும் அருளும் அன்புசாகரமாம் 

சாயி இருக்க ,சாயி இருக்க,
 சாயி இருக்க பயமேன் ?


 

Tuesday, March 26, 2013

வள்ளித்திருமணம்


(நன்றி:google)
வள்ளித்திருமணம்

மால்மகளாய்த் தவமிருந்து
மான்மகளாய் மண்ணில் வந்து
குறமகளாய் வளர்ந்தவள்ளி
மணமகளானாள்!-இன்று சிவசக்தித் தம்பதியின்
மருமகளானாள் !

புனங்காத்த புனிதையவள்
அதரத்திலோ "ஆலோலம்"
இதயமெல்லாம் குகக்கோலம்
வரைந்து நின்றாள் !-இன்று காதல்பரிசாய்க் கந்தன்
கரந்தனை வென்றாள் !

ஆணழகன் ஆறுமுகனைக்
காணக் கண் துடிதுடிக்க
நாணம் நிலம் நோக்கி இழுக்க
நாணலானாள் !-நாதன் நாண்  முடிக்க நங்கை இதய
ராணியானாள் !
 

Sunday, March 17, 2013

கந்தன் என் கைதி !கந்தன் என் கைதி !
(subbusir  sings:
http://www.youtube.com/watch?v=qyS_GlJ9Yeg&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1 )

பிரணவத்தின் பொருளை  விளக்காத அயனைச் 
சிறையிலிட்ட சண்முகா !
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள் 
கைது செய்தேன் குமரா!
 
அரனுக்கு ஏரகத்தில் பிரணவம் விளக்கப் பரம 
குருக்கோலம் பூண்ட குகா!
தந்தையைப் பூசிக்கும் மகனாய்ச் செந்தூரிலுனைக் 
கண்டதும் ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

கிழவனாய் வள்ளியுடன் லீலைகள் புரிந்த 
அழகனே!ஆறுமுகா!
குழந்தைக்குறும்பனாய் அவ்வைக்கு நீகாட்டும் 
கோலமோ ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

கோவணாண்டியாய் ஆவினன்குடிதனில் 
மேவும் பாலமுருகா!
சுரமகள் ,குறமகள் பதியாய் தணிகையிலுன் 
தரிசனம் ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா! 

Sunday, March 10, 2013

ஜம்புகேஸ்வர ஸ்தோத்ரம்

 

ஜம்புகேஸ்வர ஸ்தோத்ரம் 
(SUBBUSIR  sings:
http://www.youtube.com/watch?v=IJLCeBQNCuY&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1 )

லலாட லோசன ஜ்வாலா  நிர்தக்த   ஸ்மர  விக்ரஹ |
நமஸ்தே கரிசர்மாத்த வாஸஸே க்ருத்தி வாஸஸே||

கரும்புவில்லேந்தும் காமனைக் கனல்விழியால் 
                எரித்தவா!யானையூரீசா!
சரணமையா !கரித்தோலினை ஆடையாய்த்  
                 தரித்தவா!க்ருத்திவாசா !

யஸ்சார்மணேன  பததஸ் சக்ஷூஷீ  நீலலோஹித | 
தத்தாம பவதோ நித்யம் சதா பஸ்ச்யந்தி ஸூரய:||

பாரோர் புறக்கண்ணால் பார்க்க இயலா உன் 
                பேரொளி வீசும் உருவை ,
பற்றறுத்தஞானியர் அகக்கண்களால் கண்டு 
               களித்திருப்பர் காலமெல்லாம்.

ஸ்ருஷ்ட்யர்த்தம் பிரம்ம ரூபஸ்ஸன் ஸ்தித்யர்த்தம் ஜகதாமபி|
தவைவ ஹரநித்யோயம் ஆத்மா நாராயண:பர:|| 

ஆக்குந்தொழில் புரிய வாகீசன் வடிவெடுத்த 
            அருட்பெருஞ்ஜோதிச் சுடரே!
ஆக்கிய அனைத்தையும் அரிவடிவிலே வந்து
             காத்தருளும் கருணைக் கடலே! 

அம்ருதேஸ்வர பூதேச ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரண|
யத்தவ  ஸ்தானமனகம் தத்விஷ்ணோ :பரமம் பதம் ||

அப்புலிங்கமாய் ஆனைக் காவில் அருள்பவனே!
             பூதகணங்களின் தலைவனே!
முத்தொழிலுக்கும் காரணனே!உன்தலம் 
             நாடிடுவான்  நாரணனே! 

பக்தாந்த:கருணாம்போஜ விகாஸன கரத்விஷே|
அம்ருதேச நமஸ்தேஸ்து ருத்ராய ஸ்திர தன்வனே||

இதயந்தனை ஈர்த்து அடியார் அகங்குளிர 
            அருளும் அம்ருதேச்வரா!
எதிரி நடுநடுங்க வில்லேந்தி காட்சிதரும் 
            ருத்திரனே!மகேஸ்வரா!

ஜடாமகுட நிஷ்யந்த கங்கா ரிங்கத் ஸுதாம்சவே|
நமோ அம்ருதஸ்வரூபாய லிங்காயாமல தேஜஸே||

பொங்கிவரும் கங்கையை தடுத்திட மதியினை 
            சிரந்தனில் தரித்த சிவனே!
ஜம்புலிங்கமாய்  ஜொலிக்கும் ஜோதியே!எளியனுக்கு 
           அரணுந்தன்  தூய பதமே!

அமராதிப கோடீர நிர்க்ருஷ்டாங்க்ரி ஸரோருஹ |
ஸ்வபக்த ஜனுஷே துப்யம் மஹஸே மஹதே நம:||

வணங்கும் வாசவனின் மகுடம் மெல்ல வருட
                       விளங்கும் மலர்ப்பாதனே! 
சரணம்,அன்பர்க்கு லிங்கமாய்  திருக்காட்சி  
                      அருளும் ஜம்புநாதனே!

தீவ்யத்ஸுராசஸுர வதூ சீமந்த மணி ரஷ்மிபி:|
நீராஜித பதாப்ஜாய  தேவாய மஹதே நம :|| 

உனைப் பணிந்திடும் தேவ அசுர அணங்குகள் 
                   அணியும் ரத்னமணி ஒளியிலே 
நனைந்து நீராடிடும் நின் மலர்ப்பதங்களை 
                    பணிகின்றேன் ,பரமேஸ்வரா !


            
           

 

Monday, February 25, 2013

அழகா !வா!


அழகா !வா!
(SUBBUSIR sings:
http://www.youtube.com/watch?v=ZLZJ9NlBN9Q&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1

கயிலாய நாதருக்கு  
உயிரொலியை விளக்கியவா !
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண 
மயிலேறி  முருகா !வா!வா !

மங்களச் செவ்வாய்க்கோள் கவ்விய வெண்திங்களென 
குங்குமச்செந்நிற முகத்தில் வெண்ணீற்று நுதல் ஒளிர 
சிங்கார வேலா நீவா !-சிவ
சங்கரியின் செல்வா நீவா!
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

தன்னினமென்றே மயங்கி விண்மீன்கள் அண்மைவர
மின்னும் பன்னிரு விழிகள் தண்ணருளைத்தான் பொழிய
கங்காதரன் மகனே !வா!-சூர 
சங்காரம் செய்தவனே!வா!
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

தையல் தேவகுஞ்சரியும் ஒயிலாய் ஒருபுறமிருக்க,
மையலிலே மான்மகளும் மயங்கி மறுபுறமிருக்க,
ஒய்யார நடைபோட்டு வா !இந்த 
வையமெல்லாம் உய்ய நீ வா!
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

கயிலாய நாதருக்கு
உயிரொலியை விளக்கியவா !
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

Sunday, January 27, 2013

அன்னை அளித்த அருள் வேல்!


அன்னை அளித்த அருள் வேல்!
(A.O.L"ஜெய்,ஜெய் ராதா ரமண ஹரி போல் " என்ற

பஜனைப்பாட்டின் மெட்டு இந்தப் பாட்டுக்கு பொருந்தும் ;
பாடிப்பாருங்க வேலவனை நினைத்தபடி !)
 

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!
முன்னைவினையாவையும் முறிக்கும்வேல்!
இன்னல்நீக்கி இதமளிக்கும் வேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!

அருள்வேல்,அழகுவேல்,
முனைவேல்,முருகன்வேல்!
பெருவேல்,புனிதவேல்,
திருவேல்,துணைவன் வேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!

ஆறுபடைவீடமரும் குகன்வேல்!
ஈராறுகண்ணனின் கதிர்வேல்!
நீறணியும் நிமலன் வீரவேல்!
ஸுரசம்ஹாரனின் சக்திவேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!

கூர்வேல்,குகன்வேல்,
கதிர்வேல்,குமரன்வேல்!
வீரவேல்,வெற்றிவேல்,
தூய வேல்,திவ்ய வேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!

வள்ளிமணவாளனின் வல்வேல்!
தேவயானிநேசனின் நல்வேல்!
அண்டினோர்க்கருளும் கருணைவேல்!
கண்கண்டகடவுள் கந்தன்வேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!

வல்வேல்,வெள்ளிவேல்,
நல்வேல்,வஜ்ரவேல்!
வடிவேல், கருணைவேல்,
கந்தன்வேல்,கனகவேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!