Friday, April 27, 2012

கந்தா!கேளென் குரல்!

 ( 'தோ ஆங்கே பாரா ஹாத்'என்ற படத்தில் வரும்
"ஏ மாலிக் தேரே பந்தே"என்ற லதாவின் கடவுள்
 பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தபோது
"பாரா ஹாத்"என்றால் பன்னிருகை என்று
 நினைவுக்குவரவே என்னையும் அறியாமல் 
அதே மெட்டில் முருகன்மேல் ஒரு பாட்டு 
எழுதிவிட்டேன்;அத்தோடு சும்மா இருக்க
முடியாமல் பாடியும் இணைத்துவிட்டேன்)

கந்தா!கேளென் குரல்!

 எந்தன்  மனத்தில் மண்டியதே  இருள்;
கந்தா!வருமோ  என் வாழ்வில்  பகல்?
கேளென் கெஞ்சும் குரல்;
தாளிலே தா புகல்;
நெஞ்சம்  நாடுதே நின்  திருத்தண்ணிழல்.

தீர்த்தத்தலங்கள்தன் பேரறியேனே;
ஆறெழுத்தன்றி  வேறறியேனே;
கூத்தன் நேத்திரத்திலே
பூத்த ஞானப்பூவே!
கார்த்திகேயா!கடைதேற்ற வா!
நீயோ வரம்பற்ற கருணைக்கடல்;
நானுன்  திருவடியிலே   சிறு துகள்;
கேளென் கெஞ்சும் குரல்;
தாளிலே தா புகல்;
நெஞ்சம்   நாடுதே நின்  திருத்தண்ணிழல்.

நீறணிந்து பணிந்தேன் உனை;
தேன் கலந்து படைத்தேன் தினை;
திற அருள்விழிதனை;
முறி என் முன் வினை;
நிழலாய் நில் நீ எனக்குத் துணை.
நானோ ஞானம்  இல்லாத  ஈனன் ;
மனதனபலமில்லாத   தீனன் ;
கேளென் கெஞ்சும் குரல்;
தாளிலே தா புகல்;
நெஞ்சம்  நாடுதே நின்  திருத்தண்ணிழல்.



2 comments:

  1. Lalitha, Nalla iruku:) Keep up the good work:)

    ReplyDelete
  2. மெட்டிற்கு இணையான சொற்கள். அனுபவித்து பாடியதும் ரசனைக்குறியதே.

    ReplyDelete