
ஈசன்மகனே !வா!
(Subbusir sings:
http://www.youtube.com/watch?v=8Z13vf2HFhY&feature=em-share_video_user )
பாசத்தினைப் பிசைந்தேன் , பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
நேசமனமடியமர்த்தி ஆசையாய் ஊட்டிவிடக்
காத்திருக்கேன் ;நீ புசிக்கவா!
கயிலாயரின் அழல் நயனத்தில் பூத்தவனே!
கயல்விழியாள் தவப்பயனே!வா!
உயிரொலியின் பொருள் வினவி,அயனின் செருக்கழித்தவனே!
மயிலேறி நீ விரைந்து வா!
பாசத்தினைப் பிசைந்தேன் ,பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
வெண்ணீற்று மணங்கமழும் பொன்னெழில் மேனியனே!
பன்னிருகண்ணனே!வா!
மின்னலென ஒளிரும் உன்னன்னையின் வேலேந்தி
கண்மணியே!சுப்ரமணியா!வா!
பாசத்தினைப் பிசைந்தேன், பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
ஈசனுக்கு ஏரகத்தில் ஆசானாய்ப் பாடஞ்சொன்ன
மாசில்லாமணியே !நீவா!
காழிச்சேயாய்த் தமிழில் வீழிநாதன் புகழிசைத்த
வேலாயுதா !வேகம் வா !
பாசத்தினைப் பிசைந்தேன் , பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
நேசமனமடியமர்த்தி ஆசையாய் ஊட்டிவிடக்
காத்திருக்கேன் ;நீ புசிக்கவா!
No comments:
Post a Comment