மணிகண்டா,சரணம்.[மெட்டு.. க்ருஷ்ணக்ருஷ்ணா,முகுந்தா,ஜனார்தனா...]
=================================================================
மணிகண்டா,சரணம்,சாமிஐயப்பா,..தர்ம
சாஸ்தாவே,சரணம் சாமிஐயப்பா,
வரவேணும் துணையாய் நீ ஐயப்பா,..எமக்கு
தரவேணும் திருக்காட்சி ஐயப்பா.[மணிகண்டா.....]
ஒருமண்டல விரதம் அனுசரிப்போம்,.ஐந்து
புலன்களையும் அடக்கி இருப்போம் ,
போதைதரும் மதுவைத்தொடமறுப்போம்,..புலால்
உணவினையும் வெறுத்துத் துறப்போம்.[மணிகண்டா...]
விதித்த நியமங்கள் யாவும் கடைபிடிப்போம்,எழும்
இச்சைகள் யாவும் முறியடிப்போம்,
இடுப்பினிலே கருபபுத்துணி உடுப்போம் ,தலையில்
இருமுடியைத்தூக்கிவைத்து நடப்போம்.[மணிகண்டா..]
உன்னைக்காண மலையேறத்துணிந்தோம் ,..புனித
மாலையினை மார்பினிலே அணிந்தோம்,
மனத்தாலுன் மலர்ப்பாதம் பணிந்தோம்.,.உந்தன்
நாமத்தையே ஓயாமல் மொழிந்தோம்.[மணிகண்டா..]
கட்டாந்தரையே பட்டுமெத்தையாய்ப்படுப்போம்,..கணந்
தட்டாமலுன் நாமத்தையே ஜெபிப்போம்,
கஷ்டங்களைச்சோதனையாய் நினைப்போம்,..அதை
இஷ்டத்தோடு அனுபவித்துக் கடப்போம்.[மணிகண்டா..]
சூறாவளியோ,சீறும் சுனாமியோ..உன்பேர்
கூறியதும் மாருதமாய் மாறுமே.
காட்டில்வழிபறிக்கும் கள்வர்மனத்திலும் ..உன்பேர்
கேட்டதுமே பக்திரசம் ஊறுமே.[மணிகண்டா..]
========================================================================
ஐயப்பா,நீ மெய்யப்பா.[மெட்டு..ஹிந்தி..மேரே மெஹபூப் நஜா]
=============================================================================================
மாலரன்[மால்+அரன்] மைந்தா,ஐயப்பா,
அபயந்தருவதுன் கையப்பா,
பொன்னும்பொருளும் பொய்யப்பா,
நீமட்டுமே மெய்யப்பா.[மாலரன்..]
மைந்தனாய் மடியினிலே நீவளர
பந்தளமன்னன் செய்ததென்ன மாதவமோ?
சிகரத்திலுன் கோயில் அமைந்திடவே
சபரிமலை செய்ததென்ன புண்ணியமோ?
,, .. ,, ,,[மாலரன்..]
மலையேறத்துணிந்து மார்பில் மாலையணிந்து,
மதுமாமிசம்மறந்து,சுகம்துறந்து,
விரதமிருந்து,இருமுடிசுமந்து,
வருவோர்க்கு உன்காட்சி பெருவிருந்து.
,, ,, ,, ,, [மாலரன்..]
பதினெண்படியேறிகாணும் உன்காட்சி ,
பக்தர்களைப் பித்தர்களாய் மாற்றுதையா,
பொன்னம்பலமேட்டில் மகரஜோதியாய்நீ
மின்னக்கண்டு உன்னை மனம் போற்றுதையா,
,, ,, ,, ,,[மாலரன்..]
தேடிவந்தோம் நாங்களுந்தன் சந்நிதியை,
நாடிவந்தோம் நொந்தவாழ்வில் நிம்மதியை,
பாடிவந்தோம் உன்னைப்போற்றுந்திருத்துதியை,
வாடுமெமக்கருள்வாயே நற்கதியை,
,, ,, ,, [மாலரன்.....]
=====================================================================
No comments:
Post a Comment