சாயியைச்சரண் அடைவோம்
=================================== கலியுக இருளிடை வழிகாட்டும்
கலங்கரை விளக்கமாய் அவதரித்தே
குவலயம் எங்கும் ஆன்மிகம்
பரப்பிய சாயியைச் சரணடைவோம்
அங்கியணிந்த பக்கிரியாய்
ஷீரடியில் சீரடி பதித்தே
உலகோர்க்கெல்லாம் ஞான ஒளி
ஊட்டிய சாயியைச்சரண் அடைவோம்
ஒருபுறம் இனிக்கும் இலைகளுடன்
மறுபுறம் கசந்திடும் இலையுடைய
அதிசய வேப்பமரத்தடியில்
தோன்றிய சாயியைச் சரணடைவோம்
படுத்திட கோணிப்பை விரித்து
தலையணையாய் செங்கல் வைத்து
இடிந்தமசூதியில் துயிலிருந்த
எளியராம் சாயியைச் சரணடைவோம்
தூனிஎனும் தீக்குண்டந்தனை
அணையாமல் பேணிக்காத்திருந்தே
உதியினை பக்தர்க்கு உவந்தளித்த
உத்தமர் சாயியைச் சரணடைவோம்
திருகையில் கோதுமை மாவரைத்து
ஊரின் எல்லையில் தூவவைத்து
விடநோய் பரவாமல் தடுத்த
கடவுளாம் சாயியைச் சரணடைவோம்
================================================================
No comments:
Post a Comment