கருணைக்கோர் எல்லையுண்டோ? குருகுகனின்
கருணைக்கோர் எல்லையுண்டோ?
எந்தனது சிந்தையிலே சொந்தம்போல வந்தமர்ந்து
சுந்தரத்தமிழிலிந்த சந்தந்தனைத் தந்தகந்தன்,
முந்திவந்ததொந்தன் ஏகதந்தனுக்குடன் பிறந்தான்
தந்தைக்குபதேசம் செய்த மைந்தன்,சக்திநந்தனனின்..
[கருணைக்கோர்...]
மாங்கனிகிட்டாதது போலேயொரு லீலைசெய்து ,
ஓங்குபழநிமலை வந்தமர்ந்த வேலாயுதன்;
பாங்காக ஏரகத்தில் ஓங்காரம் விளக்கிய
காங்கேயன்,சீரலைவாய் செங்கல்வராயனின் [கருணைக்கோர்..]
அரிமகள் அம்ருதவல்லியாய்த்தவமிருந்து
சுரமகளாய்ப்பிறந்த தேவயானி துணைவன் ,
மால்மகள் சுந்தரவல்லியாய்த்தவமிருந்து
மான்மகளாய்ப்பிறந்த குறவள்ளியின் கணவன் [கருணைக்கோர்..]
சமயத்தைச்சீராக்க சங்கரராய் அவதரித்த
உமாமகேசனுக்கு வழிகாட்டி உதவிட,
குமரிலபட்டராய் அவனியிலவதரித்து,
உமிக்காந்தலிலே தவம்புரிந்தபுனிதனின் [கருணைக்கோர்..]
ஆளுடைய பிள்ளையாய் அம்பிகையின் பாலருந்தி
``தோடுடைய செவியன்'' என்று தொடங்கிப்பல
தேவாரப்பாடல்களைத் தேன்மழையாய்ப்பொழிந்த
சேவல்கொடியோனவன் ,சரவணபவன் ,முருகன்
[கருணைக்கோர்..]
வானவரும் தானவரும் வணங்கிடும் சேனானி ,
தீனர்களைக்காக்கும் தண்டாயுதபாணி ,
மீனாளும் மகேசனும் போற்றிடும் புத்ரமணி ,
தேனாய் இனிக்குமவன் திருநாமம் சுப்ரமணி.[கருணைக்கோர்]
disclaimer: images have been taken from'google search'
disclaimer: images have been taken from'google search'
No comments:
Post a Comment