Monday, May 30, 2011

அரனின் அருளே அரண்(மெட்டு..சந்த்ரசேகராஷ்டகம் )

   அரனின் அருளே அரண் 
''சந்திரசேகர சந்திரசேகர சந்திரசேகர பாஹிமாம்''என்று தொடங்கும்

     சந்திர சேகராஷ்டகத்தின்  இனிமையான மெட்டில் பாடும்வகையில்
இந்த பஜனைப்பாட்டை எழுதி இருக்கிறேன்;இது மொழிபெயர்ப்பு அல்ல.  ] 
                                                      
                                   


 அரவணைக்கும் அரனின் பஞ்சாக்ஷரத்தையோதுமன்பரை,
அரவணைக்கும் பரமனருளே அரணுமாகிக்காக்குமாம்!

லம்போதரனை நமக்களித்த
                  சிவனின் சன்னதி சேருவோம்;
 "சம்போ சிவ சம்போ"என்றே
                 ஜெபித்து அவனருள் கோருவோம்;
அம்பலத்தே ஆடும் அரனின்
                அம்புயப்பதம் பற்றுவோம்;
 நம்புமடியார் நலனைக்காக்கும்
                 நாதனாலயம் சுற்றுவோம் .
                       (அரவணைக்கும்..)

 மதிமயக்கி மோகமூட்டிட
               மலர்க்கணைகளை ஏவிய
மதனின்சதியால் மௌனம்கலைய
               வெகுண்டெழுந்து சீறியே,
 நுதல்கண்ணால் ரதிபதியை எரித்த
               ஈசன்லீலையை எண்ணுவோம்;
முதலும் முடிவும் எதுவுமற்றவன்
               பதத்தைப்பூஜை பண்ணுவோம்.
                                   (அரவணைக்கும்..)

தோகைமயிலோன் தந்தை சோம
                     சேகரன் தாள்தழுவுவோம்;
 நாகபூஷணன் பதத்தினை நம்
                       நயனநீரால் கழுவுவோம்;
தேகமெங்கும் நீறுபூசும்
                       நாதனருளைப்பருகுவோம்;
 ரோகம்நீக்கும் ரிஷபவாகனன்
                      கிருபையை எண்ணி உருகுவோம்.
                                             (அரவணைக்கும்..)

 கையில்கனலை ஏந்தும் கயிலை
                  நாதன்  தாளினைப்போற்றுவோம்;
மெய்யில்பாதியை மனைவிக்கீந்தவன்
                  மகிமையைப்பறை சாற்றுவோம்;
வையமுய்ய நஞ்சை உண்டவன்
                  நிமலபாதம் சேருவோம்;
ஐயனின் ஐந்தெழுத்து மந்திரம்
                 ஓதியே கடைதேறுவோம்;
                                     (அரவணைக்கும்..)

 மங்களந்தரும் மங்கைப் பங்கனின்
                      பங்கயப்பதம் நாடுவோம்;
 திங்கள்தங்கிடும் சடையனாம் சிவ
                     சங்கரன் புகழ்பாடுவோம்;
 பொங்கும் கங்கையைத்தலையில் தாங்கிய
                      லிங்கரூபனை வாழ்த்துவோம்;
 செங்கண்மால் திருத்தங்கையின்பதி
                         தாளிலே தலைதாழ்த்துவோம்;
                                                      (அரவணைக்கும்..)
    

No comments:

Post a Comment