Tuesday, February 8, 2011

சங்கரரின் ச்லேடை



பவாநி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் சகருணாம்

இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வம் இதி ய:

ததைவ த்வம் தஸ்மை திசஸிநிஜ -சாயுஜ்ய -பதவீம்

முகுந்த -ப்ரஹ்மேந்திர-ஸ்புட-மகுட -நீராஜித -பதாம்


இந்த ஸ்லோகத்தில் ச்லேடையணி மூலம் சங்கரர் த்வைத பக்தியிலிருந்து பக்தியும் சக்தியும் ஞானமும் கலந்திருக்கும் ஒருவிதமான அத்வைதநிலைக்கு ஒரே தூக்காகத் தூக்கி விடுகிறார்!

பொருள் :   "பவாநி! நீ தாசனான என் மேலே உன் கருணா கடாக்ஷத்தைச் செலுத்து" என்று பிரார்த்திக்க ஆசைப்படுகிற ஒருவன் 'பவாநி, நீ 'என்று அர்த்தம் தரும் பவாநி த்வம்'என்று கூற ஆரம்பித்த அந்த க்ஷணத்திலேயே நீ அவனுக்கு பிரம்ம,விஷ்ணு,இந்த்ராதியரின் கிரீடத்தால் தீபாராதனை  செய்யப்பட்ட பாதங்களைப் பெறும்படியாக உனதேயான சாயுஜ்ய பதவியைக் கொடுத்துவிடுகிறாய் .

" 'பவாநி த்வம்' என்று சொல்ல ஆரம்பித்த உடனேயே,அம்பாள் பக்தனைத் தானாக்கிக் கொண்டுவிடும் சாயுஜ்யம் தருகிறாள் "என்று சொல்லும் இடத்தில் "பவானித்வம்” என்ற வார்த்தையிலேயே ச்லேடை பண்ணி இருக்கிறார் சங்கரர்!

பக்தன் " பவாநி!நீ" என்ற அர்த்தத்தில் சொல்லப் போக,அதையே அம்பாள் வேறு பொருளில் அவனுக்கு அனுபவ சத்தியமாக ஆக்கிக் கொடுத்து விடுகிறாள்! இவன் சொன்னது "பவாநி!நீ" என்ற அர்த்தத்தில்;அவள் அதை எப்படி அர்த்தம் பண்ணி சாயுஜ்யானுபவமாக்குகிறாள்?

‘பவ' பெயர்ச்சொல்லாக இருக்கும்போது சிவன் பெயர்;அப்போது பவாநி என்றால் பவனின் பத்தினியான அம்பாள்; வினைச்சொல்லாக வரும்போது 'பவ' என்றால் 'இருப்பாயாக!','ஆவாயாக!' என்று பொருள்;['தீர்க்க சுமங்கலி பவ' என்பது உதாரணம் ]

இங்கு 'பவாநி' என்றால் 'ஆவேனாக!' என்று பொருள்.

ஆதலால் 'பவாநி த்வம்' என்பதில் 'பவாநி'யை வினைச்சொல்லாக அர்த்தம் பண்ணிக்கொண்டால் "நீயாக ஆவேனாக!"என்று பொருள்.னுக்ரஹத்தை வாரி வழங்கும் அம்பாள் பக்தன் சொல்வதை இப்படி அர்த்தம் பண்ணிக் கொள்கிறாளாம் !

இவன் என்னவோ அம்பாள் ஒரு கடாக்ஷம் பண்ணினாலே பெரிசு என்று பிரார்த்திக்க நினைக்கிறான்;"சாயுஜ்யம்" என்று ஒன்று உண்டுன்னு கூட தெரியாத பாமரன் அவன் ! ஆனாலும் அவன் "நீ ஆகிறேன்" என்று அர்த்தம் தரும் வார்த்தைகளைச் சொல்லக் கேட்ட அம்பாள் "குழந்தை இப்படிச்சொல்லிட்டானே! நாமாகவே அவன் ஆவதாகச் சொல்றானே!அவன் வார்த்தை பொய்க்கப்படாது." என்று பரம க்ருபை கொண்டு அவனைத் தானாகவே ஆக்குகிற 'நிஜ சாயுஜ்ய' பதவியைக் கொடுத்துவிடுகிறாளாம்!

' பவாநி த்வம்' என்பதற்கு 'பவாநி!நீ' என்பதோடு 'நான் நீ ஆகிறேன்' என்றும் இரண்டாவது அர்த்தம் இருப்பதில்தான் ச்லேடையணி இருக்கிறது; இன்னொரு மூன்றாவது அர்த்தத்திலும் ச்லேடை பொருந்துகிறது !!!

'த்வம்' என்பது தனி வார்த்தையாய் இல்லாமல், ஒரு வார்த்தையிலேயே ஒட்டிக்கொண்டு விகுதியாக வரும்போது 'தன்மை' என்று பொருள்படும்.[உதாரணம்: அமரத்வம் என்றால் அமரத்தன்மை] 'பவாநி, த்வம்' என்று இரண்டு வார்த்தைகளாய் இல்லாமல் 'பவாநித்வம்' என்று ஒரே வார்த்தையாகக் கொண்டால் பவாநியான அம்பாளின் தன்மை என்றாகும் .ஒருவன் 'பவாநி, த்வம்'['பவாநி, நீ'] என்று அவளருளைப் பிரார்த்திக்க ஆரம்பித்ததுமே, அவன் அடுத்த வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல் அம்பாள் இடைமறித்து, "ஆமாம்பா!நீ நானாகிற நிலை இருக்கத்தான் இருக்கு" என்று சொல்லித் தன்னுடைய தன்மையான 'பவாநித்வ'த்தையே அவனுக்குத் தந்துவிடுகிறாள்

அதனால் நாம் செய்ய வேண்டியது நிஜமான பக்தியோடு அம்பாளின் அடிமையாகி அவளைக் கடாக்ஷத்திர்க்காகப் பிரார்த்திப்பதுதான்! [மேலே எழுதியிருப்பது யாவும் பெரியவாளின் சொற்கள்;என் சொந்த வார்த்தை மிகக்குறைவே]


[சௌந்தர்யலஹரி-(22 )-பெரியவாளின்(தெய்வத்தின்)குரல் .....சுருக்கம்]

No comments:

Post a Comment