Thursday, January 27, 2011

[ breather]..மினி இடைவேளை .3
===============================
          " காலம் "என்னும் கடோத்கஜன்,
           "வானம்" என்னும் மல்டிஸ்டார் ஹோட்டலில் ,
           மேகச் சட்டினியில் மூழ்க்கி எடுத்த
           சந்திர இட்லி ஸ்வாகா செய்தான்!
           அடுத்தவேளை அசுரப்பசிக்கு ,
          'எக்ஸ்ட்ரா லார்ஜ்' சைசில் ஈசன்
          சுட்டுக்கொடுக்கும் சூரிய தோசையை
          கபகபவென்று கபளீகரிப்பான்!

Wednesday, January 26, 2011

[இடைவேளை --[2 ] ]
----------------------------
           யாரு அந்த வாத்தியாரு?
--------------------------------------------------------------------------
['ட்விங்கில் டவிங்கில் லிட் டில் ஸ்டார்' போன்ற பாப்பா பாட்டுக்களில்
உள்ள கற்பனை ,ஆங்கிலப் பாப்பாக்களுக்கு மட்டுமே சொந்தமா?
பிளாட்பாரப் பிஞ்சுகளின் கோணத்திலிருந்து நோக்கினேன் வானத்தை;
விளைவுதான் இப்பாட்டு!]

       யாரு அந்த வாத்தியாரு?
        இருந்துக்கினே இல்லாம
          தலமறவா ஒளிஞ்சிகிட்டு
           நெலாவெளிச்சத்தில
           எலவசமா ராப்பள்ளி
             நமக்காங்காட்டி நடத்தறாரு !யாரு அந்த வாத்தியாரு?
                மானத்துப்பலகையில
                 புரியாத பாசையில
                 மணிமணியா முத்துமுத்தா
                 பாடங்க அத்தனையும்
                 மொத்தமா எயுதிவச்சி
                   ஓதிக்காம,வய்யாம,
                   ஓசையே இல்லாம
                   வகுப்ப நடத்துறாரு!யாரு அந்த வாத்தியாரு?
                   எயுதிவச்ச பாடமெல்லாம்
                    விடிஞ்சதுமே தொடச்சுபுட்டு,
                      புரிஞ்சிகிட்ட பயலொருவன்
                        உண்டான்னு ஊரெல்லாம்
                          தேடித்தேடி பாக்குறாரு
                          சூரிய டார்ச் அடிச்சி!யாரு அந்த வாத்தியாரு?
=========================================================

Tuesday, January 25, 2011

[இடைவேளை]
      
           காலை கண்ட காட்சி
           --------------------------------
   மேகங்களாம் தோழியர்கள் மழைநீரால் குளிப்பாட்ட ,
    பசுமரமாம் பருவமகள்
    ஈரத்தலை காய்வதற்கு இலைமுடியைச் சிலிர்த்துதறி,
     பொற்கிரண நூலிழையால் பகலவன் நெய்தளித்த
    வெய்யிலெனுந் துவாலையால் தலை துவட்டி, தவழுந்
    தென்றலையே சீப்பாக்கித் தலைசீவி மலர்சூடி,
    மணக்கோலம் பூண்டு நிற்க ,
   
   காத்திருந்த 'வானம் ' எனும் காதலனும் மரமகளை
    மணமுடிக்க மாலை செய்தான் வண்ண வண்ண வானவில்லால்!

           மாலை கண்ட வீழ்ச்சி
          ----------------------------------------
மாலைசூடக் காத்திருந்த
 மணமகளின் மேனிதனைக்
   கோடரி கொண்டு வெட்டிக்
    கொடுமையாய்க் கொன்றுவிட்டு,
      நல்லவன்போல் நடமாடும்
        நகரவாசியே! நீ ஓர்
         நாகரிகக் காட்டுமிராண்டி!
-----------------------------------------------------------------------------------------------------

 

           

 
           
             

Monday, January 24, 2011

ஏன் படைத்தாய் மானுடனாய்?
---------------------------------------------------
      குழலாகிட வரங் கொடுத்திருந்தால் ,கண்ணன்
      குமிழ்வாயில் குடி இருந்திருப்பேன்;....வண்ண
     மயிலாகிட வாய்ப்பளித்திருந்தால் ,அவன்
     முகுடத்தில் ஓரிடம் பிடித்திருப்பேன் .

      தென்றலாய் அன்று தவழ்ந்திருந்தால் ,மண்ணைத்
      தின்றவனைத் தொட்டு மகிழ்ந்திருப்பேன் ;..பசுங்
      கன்றாய்அன்றே பிறந்திருந்தால் ,கண்ணன்
      குழலிசையில் என்னை இழந்திருப்பேன்.

      பாரதப்போரினில் அன்றவன் ஒட்டிய
      பார்த்தனின் தேராய் இருந்திருந்தால்,..என்
     சாரதி செப்பிய கீதையின் உட்பொருள்
     ஓரளவாயினும் உணர்ந்திருப்பேன்.


      'நான்' என்னும் அகந்தையில் நீ தந்த நேரத்தை
       வீண்வம்புப்பேச்சில் விரயஞ்செய்யும்...ஈன
      மானுடனாக இம்மண்ணில் மரித்திட
      ஏனென்னைப் படைத்தனை,நான்முகனே?
=====================================================






     

Saturday, January 22, 2011

  அக[ல்]விளக்கு ஒளிருமா?
=========================
     அகமெனும் அகலிலே எண்ணமெனும் எண்ணையில்
       பக்தித்திரி தோய்த்து இட்டேன் ;
       அகலுக்கு ஒளி சேர்க்க அன்னையே! உன்னிடம்
       அறிவுத்தீ வேண்டி நின்றேன்;
       வேண்டியதை   வழங்கிட ஞானத்தீயாக நீ
       திரியினை நெருங்கி நின்றாய்;
      தீ தீண்டினுந்திரி பற்றாத காரணம்
      புரியாது புலம்பலானேன்;   
        பூரண முயற்சியுடன் ஆராய்ந்தபின் அதன்
      காரணம் கண்டுகொண்டேன்!

       கலியுகக் கடையிலே மலிவாய்க் கிடைத்திடும்
       கலப்பட எண்ணை இது!
       'நான்''எனது' என்றெனது அஹங்காரத்தால் வந்த
        அஞான அழுக்குகளும் ,
        ' ஏன்?'என்ற ஆராய்ச்சியானபின் எஞ்சிய
        விஞ்ஞான விட்டைகளும்,
        கலந்து கெடுத்துவிட்ட கண்ணராவி எண்ணையில்
       திரியினைத் தோய்த்து இட்டால்,
       தீயாய் நீ திரியருகில் வரினும் என் உள்ளகல் 
        ஒளிதீபமாவதேது?

        'நான்' செத்து 'ஏன்'போன பின்னரே இவ்வகல்
         ஒளிருமென்றுணர்ந்தேன் தாயே!
=====================================================

      
     

Thursday, January 20, 2011

கதி நீயே,கந்தா![மெட்டு..முத்தைத்தரு   ]
---------------------------
     அதிதுரித கதியில் பாயும்
     நதியின்கதி மிதப்படுத்த
    மதிபொதியும் முடியில் தடுத்த மகேசனின்
    தவம் கலைக்கச் சதி செய்த
   ரதிபதியாம் மதனின் விதியை
    முடித்த சிவன் நுதல்விழி வழியே உதித்திட்ட
    அதி அதிசயப்புதல்வனின் புனித
   சதங்கையணிப் பதமலரதுவே
 கதியென இதயம் அதனில் பதித்தே நீ
  உதயம்முதல் உறங்கும் வரையில்
 நிதமும் சதாகாலமும் பார்வதி
 சுதனைத் துதித்திருந்தே நற்கதி அடைவாயே !

Sunday, January 16, 2011

இன்றெனக்கு அலங்காரம்!விடிந்ததுமே???
----------------------------------------------------------------
       மாட்டுப்பொங்கல் என்று கொம்பில்
      தீட்டுகிறாய் வர்ணங்கள் ;
      சூட்டுகிறாய் மாலைகள்;
     ஊட்டுகிறாய் வைக்கோலும் .
     ஓட்டிச்செல்வாய் விடிந்ததுமே
     ஸ்லாட்டர் ஹௌசில் பலிபோட;
     காட்டிலுள்ள விலங்குகளை
     வேட்டையாடப்போனவங்க
    மாட்டிகிட்டா அவங்க கையில்
   மாட்டுகிறாய் கைவிலங்கு;
    வீட்டுக்காக உழைத்த எனக்கோ
  பூட்டுகிறாய் வாய்விலங்கு;
   நாட்டாமை கூட்டிவெச்சு
  கேட்டிடுவேன் உன்னை நான்:
 ''போட்டுத்தள்ள விடுவாயா
   ஒட்டர் ஐ டி எனக்கிருந்தா?''
-----------------------------------------------------------------------------------

Friday, January 14, 2011

  பொங்கலோ பொங்கல் !
----------------------------------------------
     பொன்மணி வயலிலே பூத்தாச்சு;..மின்னும்
     நெல்மணியாயது காச்சாச்சு .
    அறுவடை பண்ணி முடிச்சாச்சு ..நெல்லைக்
    குத்தி அரிசி பொடச்சாச்சு.
      [பொங்குமடி ,பொங்கல் பொங்குமடி!..சுப
       மங்களம் பூத்துக் குலுங்குமடி!]

      சூரியன் வந்து சிரிச்சிபுட்டான் ..செங்
     கதிரை விசிறியா  விரிச்சிபுட்டான்.
    பூமிக்குப் பொன்விளக்கேத்திபுட்டான்..வெயில்
   பொன்னாடையால் அவளைப் போத்திபுட்டான்.[பொங்குமடி...]

      மஞ்சக்கன்னு கொண்டு வாருங்கடி ..பானை
     நெஞ்சிலே தாலியாக்கட்டுங்கடி ;
    பானையிலே பால்பொங்கல் பொங்கவெச்சு ..நல்ல
   செங்கரும்போடு படையுங்கடி ![பொங்குமடி..]
------------------------------------------------------------------------------------------------