Friday, April 27, 2012

கந்தா!கேளென் குரல்!

 ( 'தோ ஆங்கே பாரா ஹாத்'என்ற படத்தில் வரும்
"ஏ மாலிக் தேரே பந்தே"என்ற லதாவின் கடவுள்
 பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தபோது
"பாரா ஹாத்"என்றால் பன்னிருகை என்று
 நினைவுக்குவரவே என்னையும் அறியாமல் 
அதே மெட்டில் முருகன்மேல் ஒரு பாட்டு 
எழுதிவிட்டேன்;அத்தோடு சும்மா இருக்க
முடியாமல் பாடியும் இணைத்துவிட்டேன்)

கந்தா!கேளென் குரல்!

 எந்தன்  மனத்தில் மண்டியதே  இருள்;
கந்தா!வருமோ  என் வாழ்வில்  பகல்?
கேளென் கெஞ்சும் குரல்;
தாளிலே தா புகல்;
நெஞ்சம்  நாடுதே நின்  திருத்தண்ணிழல்.

தீர்த்தத்தலங்கள்தன் பேரறியேனே;
ஆறெழுத்தன்றி  வேறறியேனே;
கூத்தன் நேத்திரத்திலே
பூத்த ஞானப்பூவே!
கார்த்திகேயா!கடைதேற்ற வா!
நீயோ வரம்பற்ற கருணைக்கடல்;
நானுன்  திருவடியிலே   சிறு துகள்;
கேளென் கெஞ்சும் குரல்;
தாளிலே தா புகல்;
நெஞ்சம்   நாடுதே நின்  திருத்தண்ணிழல்.

நீறணிந்து பணிந்தேன் உனை;
தேன் கலந்து படைத்தேன் தினை;
திற அருள்விழிதனை;
முறி என் முன் வினை;
நிழலாய் நில் நீ எனக்குத் துணை.
நானோ ஞானம்  இல்லாத  ஈனன் ;
மனதனபலமில்லாத   தீனன் ;
கேளென் கெஞ்சும் குரல்;
தாளிலே தா புகல்;
நெஞ்சம்  நாடுதே நின்  திருத்தண்ணிழல்.



Monday, April 23, 2012

கந்தனை வந்தனை செய்வோம்!



கந்தனை வந்தனை செய்வோம்!

(வள்ளிக்கணவன் பேரை ..மெட்டில் சுப்பு ஐயா

பாடுவதைக் கேட்டுக்கொண்டே வாசிக்கவும்)



பிள்ளையார்க்கிளையோனை
கள்ளங்கபடமற்ற
உள்ளத்தால் வணங்கிநின்றால் ..வள்ளல்
துள்ளி வருவானடி ..அருளை
அள்ளிப்பொழிவானடி!


காத்யாயினி சுதனை
மாத்திரம் மனத்திலே
தோத்திரம் செய்தபின்னால் ..வேறு
சாத்திரம் பார்க்கணுமோ?..தீர்த்த
யாத்திரை தேவைதானோ ?


அரன்மகன் முருகனை
ஒருமுறை உளமார
``சரவணபவா!" என்றே அழைத்தால்
வரந்தர வருவானடி ,...அபய
கரங்காட்டி அருள்வானடி !


தேவசேனா பதியாம்
சேவல் கொடியோன்பேரை
நாவில் நிறுத்திவிட்டால்..தீரா
தீவினை தீருமடி,...பண்ணிய
பாவங்கள் பொசுங்குமடி!


மாயோன்மருகன் நாமம்
தூயமனத்துடனே
ஓயாமல் ஒதிநின்றால் ..வேலன்
நேயமாய் நெருங்கிடுவான் ..நம்மைத்
தாயென அணைத்திடுவான் !


அப்பனுக்குப் பிரணவத்தின்
ஒப்பற்ற பொருளினை
செப்பிய சுப்பனவன்....மந்திரம்
தப்பாமல் ஜெபித்திருந்தால்--முருகன்
எப்போதும் துணை இருப்பான் .


அந்திமகாலம் நம்மை
சொந்தங்கள் `சீ..' என்றாலும்
பந்தங்கள் `போ..' என்றாலும் ..புகல்தர
கந்தனிருக்கானடி.......அவனையே
சிந்தித்திருப்போமடி ,....வேலனையே
வந்தித்திருப்போமடி!










































Friday, April 13, 2012

புத்தாண்டுக் கும்மி

புத்தாண்டுக் கும்மி

நந்தன ஆண்டு பிறந்ததடி ! -தமிழ்ச்
சிந்தொன்று நெஞ்சில் சுரந்ததடி !
தெய்வங்களின்  புகழ்  இசைத்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடி கும்மியடி!


தொடங்கியவை நடந்தேறுமடி-ஏதும்
தடங்கலின்றி நிறைவேறுமடி !
 தந்தனைப் போற்றித்  துதித்தபடி,-பெருந்
தொந்தனைப் போற்றித் துதித்தபடி-இரு
 கைதட்டிக்   கொண்டாடி கும்மியடி !
கைதட்டிக் கொண்டாடிக் கும்மியடி !

கருணைமுகில் மழை பொழியுமடி-மன
மலங்கள் அழிந்து ஒழியுமடி!
கந்தனை வந்தனை செய்தபடி -உமை
மைந்தனை வந்தனை செய்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி ! 
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !

அஞ்செழுத்து அருள் புரியுமடி -நமது
நெஞ்சத்தில் நிம்மதி நிறையுமடி!
ஈசனைத்தோத்திரம் செய்தபடி -உமை
நேசனைத்தோத்திரம் செய்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !

மெஞ்ஞானப்பேரொளி பாயுமடி-மன
அஞ்ஞானப் பேரிருள் மாயுமடி
சாமளையைப் பாடித்துதித்தபடி -அபி
ராமியைப்  பாடித்துதித்தபடி   -இரு                
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக் கொண்டாடிக்  கும்மியடி !

பேரருள் வெள்ளம் பெருகுமடி-கலி
தீர்த்து அபயம் அருளுமடி!
நாரணனை நெஞ்சில் நினைத்தபடி-பரி
பூரணனை நெஞ்சில் நினைத்தபடி -இரு  
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !

மங்களம் எங்கெங்கும்  பொங்குமடி-அது
மங்காமல் என்றென்றும் தங்குமடி!
திருமகள் பெருமையை இசைத்தபடி-செல்வம்
அருள்பவள் பெருமையை இசைத்தபடி-இரு  
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !

கலைகளெல்லாம் வளர்ந்தோங்குமடி-நாம்
கடையோர் எனும் நிலை நீங்குமடி!
பாரதியின் புகழ் இசைத்தபடி -ஞான
வாரிதியின் புகழ் இசைத்தபடி -இரு                    
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !




நந்தன ஆண்டு பிறந்ததடி ! -தமிழ்ச்

சிந்தொன்று நெஞ்சில் சுரந்ததடி !
தெய்வங்களின் புகழ் இசைத்தபடி -இரு
கைதட்டிக் கொண்டாடி கும்மியடி!
கைதட்டிக்கொண்டாடிக்  கும்மியடி !






















































Tuesday, April 10, 2012

சுப்ரமண்யம் வந்தேஹம்

                    (சுப்பு ஐயா 

                    http://kandhanaithuthi.blogspot.com/          என்ற லிங்கில்
    பாடக் கேட்டு ரசித்தபடி  பாட்டை வாசிக்கவும் :) 




'கிருஷ்ணம் வந்தே' என்ற A.O.L பஜன் மெட்டைத் தழுவி

 பாடுவதா  நெனச்சிண்டு 'கீச்''கீச்'சி இருக்கேன்! பொறுத்தார் 

பூமி  ஆள்வார்!  [என்பாட்டைக் கேட்பார்  ஏமி ஆள்வார் ??? :)) ]
                    -----------------------------------------------------------------------

சுப்ரமண்யம் வந்தேஹம்

ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தேஹம்

ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தே
பரமேஸ்வரி ப்ரியநந்தனா!சுரகுஞ்சரி மனமோஹனா!
வருவாய்,அருள்வாய் மயில்வாகனா!
ஏரகத்தோனே !வேல்முருகா! நாராயணனின்  திரு மருகா!
சூரசம்ஹாரா!சிவகுகா!ஆறிருகண்ணனே!ஆறுமுகா!
ஸ்கந்தம்வந்தேசுப்ரமண்யம்வந்தேஹம்
ஸ்கந்தம்வநதேசுப்ரமண்யம்வந்தே

எந்தன் சிந்தைபுகுந்து ,சந்தமொன்றைத்தந்து
விந்தைபுரிந்த கந்தா!...அனந்தா!
உந்தன்பாதாரவிந்தம் எந்தன் இல்லம்பதிய
வந்தேநீ தரிசனம் தா ,..தினம் தா..
சிந்தைதனை மயக்கும் மந்தஹாசம் சிந்த
வந்தேநீ தரிசனம்தா
ஓங்காரம் விளக்கிய உமைபாலா!
காங்கேயா!கதிர்வேலா!..
ஸ்கந்தம்வந்தே சுப்ரமண்யம் வந்தேஹம்

ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தே

எந்தன்சிந்தை புகுந்து சந்தமொன்றைத்தந்து
விந்தைபுரிந்த கந்தா! ..அனந்தா!
இந்திரன்செல்வியோடும் ,சுந்தரவள்ளியோடும்
வந்தேநீ தரிசனம்தா ..தினம்தா
உந்தன் திருமந்திரம் எந்தநேரமும் என்
சிந்தையில் ஒலிக்கவரம் தா
ஓங்காரம் விளக்கிய உமைபாலா!
காங்கேயா!கதிர்வேலா!..
ஸ்கந்தம்வந்தே சுப்ரமண்யம் வந்தேஹம்

ஸ்கந்தம் வந்தே சுப்ரமண்யம் வந்தே









.

Wednesday, April 4, 2012

ஆறுமுகன் அருள்வான்!




ஆறுமுகன் அருள்வான்!
 (கீழுள்ள லிங்குகளில் சுப்பு ஐயாவும் மீனாம்மாவும்
       ' காவடிச்சிந்து 'பாடக்கேட்டு ரசிக்கலாம்!)

http://youtu.be/OB9A3Z4wlNU


OR

http://kandhanaithuthi.blogspot.com/


அன்னை அபிராமி தனயன்,-ஒற்றைத்
தந்தக்கணபதிக்கிளையோன் ,-கந்தன்
பொன்னடிபணிந்திடும் தன்னடியாருக்கு
பன்னிருகையாலே அருள்வான்,-பொங்கும்
இன்பத்தை எந்நாளும் பொழிவான் ;

அன்பாய் அருள்வான் ,இன்பம் பொழிவான்!
அன்பாய் அருள்வான் ,இன்பம் பொழிவான்!

கயிலாயரின்மகன் முருகன்,--வண்ண
மயிலிறகணிவோனின் மருகன்,--கந்தன்
பயபக்தியாய்வந்து பதமலர் பணிவோரின்
துயரங்கள் யாவையும் துடைப்பான் ,--சுக
மயமான வாழ்வினைக் கொடுப்பான்.


துயர் துடைப்பான்,சுகங்கொடுப்பான் ,
துயர் துடைப்பான்;சுகங்கொடுப்பான்!

இந்திரன்மகள் மனவாசன்--தூய
அன்புக்குறவள்ளி நேசன் --கந்தன்  
சிந்தையிலே ஆறெழுத்து மந்திரம் ஜெபிப்போரின்
முந்தைவினைகளையறுப்பான் ,--பெற்ற
தந்தையெனத் துணை இருப்பான் ,


வினையறுப்பான்,துணை இருப்பான்,
வினையறுப்பான்,துணை இருப்பான் !

  (சகிப்புத்தன்மையை பரிசோதித்துக் கொள்ள  விரும்புவோர்
 என் குரலிலும்பாட்டைக் கேட்கலாம்  கீழே! )