Monday, May 30, 2011

அரனின் அருளே அரண்(மெட்டு..சந்த்ரசேகராஷ்டகம் )

   அரனின் அருளே அரண் 
''சந்திரசேகர சந்திரசேகர சந்திரசேகர பாஹிமாம்''என்று தொடங்கும்

     சந்திர சேகராஷ்டகத்தின்  இனிமையான மெட்டில் பாடும்வகையில்
இந்த பஜனைப்பாட்டை எழுதி இருக்கிறேன்;இது மொழிபெயர்ப்பு அல்ல.  ] 
                                                      
                                   


 அரவணைக்கும் அரனின் பஞ்சாக்ஷரத்தையோதுமன்பரை,
அரவணைக்கும் பரமனருளே அரணுமாகிக்காக்குமாம்!

லம்போதரனை நமக்களித்த
                  சிவனின் சன்னதி சேருவோம்;
 "சம்போ சிவ சம்போ"என்றே
                 ஜெபித்து அவனருள் கோருவோம்;
அம்பலத்தே ஆடும் அரனின்
                அம்புயப்பதம் பற்றுவோம்;
 நம்புமடியார் நலனைக்காக்கும்
                 நாதனாலயம் சுற்றுவோம் .
                       (அரவணைக்கும்..)

 மதிமயக்கி மோகமூட்டிட
               மலர்க்கணைகளை ஏவிய
மதனின்சதியால் மௌனம்கலைய
               வெகுண்டெழுந்து சீறியே,
 நுதல்கண்ணால் ரதிபதியை எரித்த
               ஈசன்லீலையை எண்ணுவோம்;
முதலும் முடிவும் எதுவுமற்றவன்
               பதத்தைப்பூஜை பண்ணுவோம்.
                                   (அரவணைக்கும்..)

தோகைமயிலோன் தந்தை சோம
                     சேகரன் தாள்தழுவுவோம்;
 நாகபூஷணன் பதத்தினை நம்
                       நயனநீரால் கழுவுவோம்;
தேகமெங்கும் நீறுபூசும்
                       நாதனருளைப்பருகுவோம்;
 ரோகம்நீக்கும் ரிஷபவாகனன்
                      கிருபையை எண்ணி உருகுவோம்.
                                             (அரவணைக்கும்..)

 கையில்கனலை ஏந்தும் கயிலை
                  நாதன்  தாளினைப்போற்றுவோம்;
மெய்யில்பாதியை மனைவிக்கீந்தவன்
                  மகிமையைப்பறை சாற்றுவோம்;
வையமுய்ய நஞ்சை உண்டவன்
                  நிமலபாதம் சேருவோம்;
ஐயனின் ஐந்தெழுத்து மந்திரம்
                 ஓதியே கடைதேறுவோம்;
                                     (அரவணைக்கும்..)

 மங்களந்தரும் மங்கைப் பங்கனின்
                      பங்கயப்பதம் நாடுவோம்;
 திங்கள்தங்கிடும் சடையனாம் சிவ
                     சங்கரன் புகழ்பாடுவோம்;
 பொங்கும் கங்கையைத்தலையில் தாங்கிய
                      லிங்கரூபனை வாழ்த்துவோம்;
 செங்கண்மால் திருத்தங்கையின்பதி
                         தாளிலே தலைதாழ்த்துவோம்;
                                                      (அரவணைக்கும்..)
    

Sunday, May 15, 2011

வழித்துணை

                              வழித்துணை

                                     
[அப்பையரின் 'மார்க்கபந்து 'ச்தோத்திரத்தைத் தழுவி எழுதிய கீழுள்ள

   பஜனை அதன் முழுமையான மொழி பெயர்ப்பு அல்ல.

   இதை "நந்தவனத்திலோர் ஆண்டி " என்ற பாட்டின் மெட்டிலேயே
    சுலபமாகப் பாடும்படி அமைத்திருக்கிறேன் ]

  சம்போ மகா தேவ தேவா -சிவ 
  சம்போமஹாதேவ தேவேச சம்போ!
 சம்போமஹாதேவ தேவா!


    நதிசூடும் சடையிலோர் கிரீடம் -புனித
    நுதலிலே ரதிபதியின் விதி முடித்த நயனம்,
   எதிரிகளை வதம் செய்யும் சூலம் -கொண்ட
   முதல்வா!எமக்கு நீ வழித்துணையாய் வருவாய்! (சம்போ)

    படமெடுத்தாடிடும் பாம்பும் -சடை
   முடியிலே பொங்கிடும் கங்கையின் நீரும்,
   கடைதேற்றும் ஓங்கார வடிவும் -கொண்ட
   விடையவா!எமக்குநீ வழித்துணையாய் வருவாய்! (சம்போ)

                                          

   தக்ஷயஞம் தடுத்த தீரம் -உலக
   ரக்ஷகரின் பகைவரை வென்றிடும் வீரம்,
  பொற்சிலை ஏந்திடும் கரமும் -கொண்ட
  பிக்ஷாடனரூபா! வழித்துணையாய் வருவாய்! (சம்போ)

  மன்மதனை அடக்கிய திருக்கண்  -விடம்  
  உண்டதால் கருநீல நிறமான கண்டம் , 
  விண்ணைச்சுமந்திடும் சிரமும் -மின்னும்
  வெண்பல்லும் கொண்டவா!வழித்துணையாய் வருவாய்! (சம்போ)

                                          

 மந்தஹாசம் சிந்தும்வதனம் -பெரும்
 மந்தரமலையினும் வலுவான தேகம்,
 சுந்தரி உறையும் இடப்பாகம் -கொண்ட
 நந்திவாகனா! நீ வழித்துணையாய் வருவாய்! (சம்போ)

அப்பைய்யரின் கீதசாரம் -இதனை
செப்புவோம் பக்தியாய் பயணிக்கும் நேரம்,
ஒப்பற்ற உமையொரு பாகன் -நம்மை
ரட்சிக்க நமது  வழித்துணையாக வருவான் (சம்போ)

Saturday, May 7, 2011

உயிர் அன்னவன்


கோகுல மண்ணள்ளித் தின்னவன்;--கொஞ்சும்
   கோபியருடன் லீலை பண்ணவன்;
   ராதையின் நெஞ்சத்து மன்னவன்;--பக்த
   மீராவுக்கும் அவன் 'தன்னவன்'!


       உன்னவன் ..அவன் என்னவன் ..நம்ம
        எல்லோருக்கும் 'உயிர்' அன்னவன்!


  பாரதி பாட்டிலோர் பெண்ணவன்;--பாவை
  பாடிய கோதையின் க(ண்)ணவன்;
  கீதை எனும் வேதம் சொன்னவன்;--ஸ்ரீ
  ரங்கம் துயின்றதால் தென்னவன்!
                              


        உன்னவன் ..அவன் என்னவன் ..நம்ம
        எல்லோருக்கும் 'உயிர்' அன்னவன்!


 ராமாவதாரத்துப் பின்னவன்;--திரு
 மாலாய் சங்கரிக்கு முன்னவன்;
 பலராமனுக்குச் சின்னவன்;--ஓங்கி
 உலகையளந்து நின்னவன்!

                                            

         உன்னவன் ..அவன் என்னவன் ..நம்ம
        எல்லோருக்கும் 'உயிர்' அன்னவன்!

Wednesday, May 4, 2011

சரணம் ஷடானனா![கிருத்திகை கீதம்]

          
      சரணம் ஷடானனா![கிருத்திகை கீதம்]


                   விண்ணோரும் தொழும் பன்னிருகண்ணனின்
                    சன்னதியை  நாடு ,--அவன் 
                    புண்ணிய நாமத்தை  எண்ணி இனியதோர் 
                   பண்ணமைத்தே பாடு !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
 சரவணபவ  ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]

                   உருகியுருகி மனமுருகியுருகி  திரு
                   முருகனின் பேரோது,-அவன் 
                  அருகில் வரவும்  அருள்பெருகிவரவுமதைப் 
                   பருகிமகிழ்ந்தாடு !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
 சரவணபவ  ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]

                   பவபயம்போக்கி  நோய்நொடி நீக்கும் 
                   ஔஷதஎழுத்தாறு ,--ஓங்கி 
                  ``சரவணபவனுக்கு அரோஹரா!'' என்றே 
                    பரவசமாய்க் கூறு !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
 சரவணபவ  ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா ]


                                                        


                  வினைப்பயன் தீர்க்க  முனைவேலேந்தி 
                  வருகிறான் வேல்முருகன் ,--நம்ம
                 பயந்தனைப்போக்க மயில்மீதேறி 
                 வருகிறான்  மால்மருகன் !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
 சரவணபவ  ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா!]


                 தேவயானியுடன்  பாவைவள்ளியுடன்
                வருகிறான்  ஆறுமுகன்,--தீய 
                ஏவல் வினையறுக்கும்  காவல்தெய்வமாய் 
                வருகிறான் குருகுகன் !
[சரவணபவ ஓம்,சரவணபவ ஓம்,சரணம் ஷடானனா!
 சரவணபவ  ஓம்,சரவணபவ ஓம்,சரணம் சிவனந்தனா!]