(நன்றி:google)
வள்ளித்திருமணம்
மால்மகளாய்த் தவமிருந்து
மான்மகளாய் மண்ணில் வந்து
குறமகளாய் வளர்ந்தவள்ளி
மணமகளானாள்!-இன்று சிவசக்தித் தம்பதியின்
மருமகளானாள் !
புனங்காத்த புனிதையவள்
அதரத்திலோ "ஆலோலம்"
இதயமெல்லாம் குகக்கோலம்
வரைந்து நின்றாள் !-இன்று காதல்பரிசாய்க் கந்தன்
கரந்தனை வென்றாள் !
ஆணழகன் ஆறுமுகனைக்
காணக் கண் துடிதுடிக்க
நாணம் நிலம் நோக்கி இழுக்க
நாணலானாள் !-நாதன் நாண் முடிக்க நங்கை இதய
ராணியானாள் !
கந்தன் என் கைதி !
(subbusir sings:
http://www.youtube.com/watch?v=qyS_GlJ9Yeg&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1 )
பிரணவத்தின் பொருளை விளக்காத அயனைச்
சிறையிலிட்ட சண்முகா !
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!
அரனுக்கு ஏரகத்தில் பிரணவம் விளக்கப் பரம
குருக்கோலம் பூண்ட குகா!
தந்தையைப் பூசிக்கும் மகனாய்ச் செந்தூரிலுனைக்
கண்டதும் ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!
கிழவனாய் வள்ளியுடன் லீலைகள் புரிந்த
அழகனே!ஆறுமுகா!
குழந்தைக்குறும்பனாய் அவ்வைக்கு நீகாட்டும்
கோலமோ ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!
கோவணாண்டியாய் ஆவினன்குடிதனில்
மேவும் பாலமுருகா!
சுரமகள் ,குறமகள் பதியாய் தணிகையிலுன்
தரிசனம் ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!
ஜம்புகேஸ்வர ஸ்தோத்ரம்
(SUBBUSIR sings:
http://www.youtube.com/watch?v=IJLCeBQNCuY&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1 )
லலாட லோசன ஜ்வாலா நிர்தக்த ஸ்மர விக்ரஹ |
நமஸ்தே கரிசர்மாத்த வாஸஸே க்ருத்தி வாஸஸே||
கரும்புவில்லேந்தும் காமனைக் கனல்விழியால்
எரித்தவா!யானையூரீசா!
சரணமையா !கரித்தோலினை ஆடையாய்த்
தரித்தவா!க்ருத்திவாசா !
யஸ்சார்மணேன பததஸ் சக்ஷூஷீ நீலலோஹித |
தத்தாம பவதோ நித்யம் சதா பஸ்ச்யந்தி ஸூரய:||
பாரோர் புறக்கண்ணால் பார்க்க இயலா உன்
பேரொளி வீசும் உருவை ,
பற்றறுத்தஞானியர் அகக்கண்களால் கண்டு
களித்திருப்பர் காலமெல்லாம்.
ஸ்ருஷ்ட்யர்த்தம் பிரம்ம ரூபஸ்ஸன் ஸ்தித்யர்த்தம் ஜகதாமபி|
தவைவ ஹரநித்யோயம் ஆத்மா நாராயண:பர:||
ஆக்குந்தொழில் புரிய வாகீசன் வடிவெடுத்த
அருட்பெருஞ்ஜோதிச் சுடரே!
ஆக்கிய அனைத்தையும் அரிவடிவிலே வந்து
காத்தருளும் கருணைக் கடலே!
அம்ருதேஸ்வர பூதேச ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரண|
யத்தவ ஸ்தானமனகம் தத்விஷ்ணோ :பரமம் பதம் ||
அப்புலிங்கமாய் ஆனைக் காவில் அருள்பவனே!
பூதகணங்களின் தலைவனே!
முத்தொழிலுக்கும் காரணனே!உன்தலம்
நாடிடுவான் நாரணனே!
பக்தாந்த:கருணாம்போஜ விகாஸன கரத்விஷே|
அம்ருதேச நமஸ்தேஸ்து ருத்ராய ஸ்திர தன்வனே||
இதயந்தனை ஈர்த்து அடியார் அகங்குளிர
அருளும் அம்ருதேச்வரா!
எதிரி நடுநடுங்க வில்லேந்தி காட்சிதரும்
ருத்திரனே!மகேஸ்வரா!
ஜடாமகுட நிஷ்யந்த கங்கா ரிங்கத் ஸுதாம்சவே|
நமோ அம்ருதஸ்வரூபாய லிங்காயாமல தேஜஸே||
பொங்கிவரும் கங்கையை தடுத்திட மதியினை
சிரந்தனில் தரித்த சிவனே!
ஜம்புலிங்கமாய் ஜொலிக்கும் ஜோதியே!எளியனுக்கு
அரணுந்தன் தூய பதமே!
அமராதிப கோடீர நிர்க்ருஷ்டாங்க்ரி ஸரோருஹ |
ஸ்வபக்த ஜனுஷே துப்யம் மஹஸே மஹதே நம:||
வணங்கும் வாசவனின் மகுடம் மெல்ல வருட
விளங்கும் மலர்ப்பாதனே!
சரணம்,அன்பர்க்கு லிங்கமாய் திருக்காட்சி
அருளும் ஜம்புநாதனே!
தீவ்யத்ஸுராசஸுர வதூ சீமந்த மணி ரஷ்மிபி:|
நீராஜித பதாப்ஜாய தேவாய மஹதே நம :||
உனைப் பணிந்திடும் தேவ அசுர அணங்குகள்
அணியும் ரத்னமணி ஒளியிலே
நனைந்து நீராடிடும் நின் மலர்ப்பதங்களை
பணிகின்றேன் ,பரமேஸ்வரா !