நலந்தரும் தலம்
( "கங்கைக் கரைத் தோட்டம்"..மெட்டில் பாடிப்பாருங்க )
அமரரைக்காக்க
அசுரரையழித்த
குமரன் அமர்ந்த தலம் ..செந்தூர்
நலந்தரும் புனித தலம்.
சீரலைவாய் என
பாரோர்புகழும்
பேருடன் திகழும் தலம் ..செந்தூர்
ஆழ்கடல் சூழ்ந்த தலம்
சூரபத்மன் தன்னைக்கொன்று,
வெற்றிமாலை சூடிக்கொண்டு,
செந்தில்மலை வந்தகந்தன்
தந்தையாரைப் பூஜைசெய்ய
பூவேந்தும் கரத்தானாய்
பவ்யதிருக்கோலம்
காட்டும் திவ்யதலம்..செந்தூர்
பக்தரின் புண்ய தலம்.
அமரரைக்காக்க
அசுரரையழித்த
குமரன் அமர்ந்த தலம் ..செந்தூர்
நலந்தரும் புனித தலம்.
பன்னிருகரத்தவனை
பயபக்தியாய்ப்பணிந்து,
பன்னீரிலையில் தந்த
வெண்ணீற்றினைஅணிந்தால்
அல்லலெல்லாம் நீங்கும்;
செல்வவளம் ஓங்கும்;
நிழலெனத் துணைவருவான் -கந்தன்
கழலினில் புகல் தருவான் .
அமரரைக்காக்க
அசுரரையழித்த
குமரன் அமர்ந்த தலம் ..செந்தூர்
நலந்தரும் புனித தலம்.
கனலாய் உதித்த அருட்புனல்
(subbu sir sings:
http://www.youtube.com/watch?v=RBucGWKRJDo&feature=player_embedded )
புனல்சூடும் புராரியின் நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!
கனியால் கனிந்து கோவணாண்டிக்கோலம்
புனைந்த பழநிபாலா!
உனை நினைந்துருகும் பக்தரின் முந்தை
வினைமுறி வடிவேலா!
புனல்சூடும் புராரியின் நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!
ப்ரணவப்பொருள் சொல்லி பரமகுருவான
புனிதா!சுவாமிநாதா!
அனுதினம் ஆறெழுத்தை ஜெபிப்போர்க்கு
இனி பிறவா வரம் தா !
புனல்சூடும் புராரியின் நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!
தினையுடன் மனமும் தந்த வனிதையை
மணந்த தணிகையழகா!
"துணைநீயே!"எனும் தீனரை அருளாலே
அணைத்திடு!ஆறுமுகா
புனல்சூடும் புராரியின் நுதல்விழிதனிலே
கனலாயுதித்த புதல்வா!
இணையில்லா உன் இணையடிதன்னைப்
பணிவோர்க்குப் புகல்தா!