அக்னிப்பூவே!வந்தனம் !
தென்றல் தாங்கிவர,கங்கை வாங்கித்தர,
கன்னியர் வளர்த்த அக்னிப்பூவே!
மன்றாடி மைந்தா!குன்றாடுங்கந்தா!
வந்தனம்!அமரர் படைக்கோவே!
புனலணியும் அரனின் அனல்விழிப்பொழிலில்
அரும்பிய ஞானக் கனற்போதே !
உனைப்பணிந்திடுவோர் மன இருள்தன்னை
மாய்த்திட வருவாய் மயில்மீதே!
தென்றல் தாங்கிவர,கங்கை வாங்கித்தர,
கன்னியர் வளர்த்த அக்னிப்பூவே!
மன்றாடி மைந்தா!குன்றாடுங்கந்தா!
வந்தனம்!அமரர் படைக்கோவே!
நிலவணியும் நிமலன் நங்கையுறவின்றி
விழியால் படைத்த அதிசயமே !
கலியுக வரதா!மலரடி தொழுதோம்;
அகற்றிடுவாய் எங்கள் பவபயமே!
தென்றல் தாங்கிவர,கங்கை வாங்கித்தர,
கன்னியர் வளர்த்த அக்னிப்பூவே!
மன்றாடி மைந்தா!குன்றாடுங்கந்தா!
வந்தனம்!அமரர் படைக்கோவே!
மயிலே!மனமார்ந்த நன்றி!
( "தீராத விளையாட்டுப் பிள்ளை " மெட்டு )
மயிலே! உனக்கு மிகவும் நன்றி,--நாங்கள்
தவிக்கிறோம் உனைப்புகழத் தகுந்தசொல் இன்றி.[.மயிலே....]
கனிக்காக உன்மேல்புவி பவனி ...வந்த
கந்தன் கனிகிட்டாமல் சினந்தாண்டியாகி ,
தென்பழநிமலையில் எழுந்தருளி ...தமிழ்த்
தெய்வமாய்த் தமிழர்க்கு அருளவழிசெய்த
மயிலே உனக்கு மிகவும் நன்றி!
பழனியிலே ஆண்டிக்கோலம்,..ஸ்வாமி
மலையிலே ஓங்காரம் விளக்குங்குருக்கோலம் ,
செந்தூரில் சிவபூஜைக்கோலம் ...என்று
கந்தனின் கோலம்பல காணவழிசெய்த
மயிலே உனக்கு மிகவும் நன்றி!
குன்றத்தில் சுரமகள் கணவன் ,..குறக்
கன்னியுடன் பழமுதிர்ச்சோலையில் முனிவன் ,
தணிகையில் வள்ளியின் துணைவன்,--என்று
குகனின் எழிற் கோலம்பல காணவழிசெய்த
மயிலே உனக்கு மிகவும் நன்றி,--நாங்கள்
தவிக்கிறோம் உனைப்புகழத் தகுந்தசொல் இன்றி.
மயிலே மனமார்ந்த நன்றி!!--வண்ண
மயிலே மனமார்ந்த நன்றி!!--தோகை
மயிலே மனமார்ந்த நன்றி!!
மனமார்ந்த நன்றி!!
அருந்து ஆறெழுத்தெனும் மருந்து !
(சுப்பு ஐயா கீழுள்ள லிங்கில் பாடுவதைக் கேட்கவும்)
http://www.youtube.com/watch?v=dJpN5oNH_kA&feature=em-share_video_user
http://www.youtube.com/watch?v=wofBs1SDGzU&feature=youtu.be
ஓம்சரவணபவா சரணம் ,ஓம்சரவண பவா சரணம்,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்
கனிகிட்டாத காரணத்தாலே
சினந்ததுபோலொரு லீலைசெய்து
அனைத்தும் துறந்து ஆண்டிக்கோலம்
புனைந்த பழநிபாலா!
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்,
பரமனுந்திருவாய் மூடியே உந்தன்
விரைகழலருகே வினயமாய் அமர ,
பிரணவம் விளக்கி சிவகுருவான
ஏரகஸ்வாமிநாதா!
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம்,
அரிமகள் அம்ருதவல்லியாய்ப்பெருந்தவம்
புரிந்தே இந்திரன்மகளாய்ப்பிறந்த
சுரகுஞ்சரியை நன்மணங் கொண்ட
திருப்பரங்குன்றக் குமரா!
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
எழில்மிகு குறமகள் வள்ளியின்முன்னே
கிழமுனிவரின் வேடத்தில் வந்து
பழகியே பற்பல லீலைகள் புரிந்த
பழமுதிர்ச் சோலை வேலா!
ஓம்சரவண பவா, ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம் ,
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
திருமால்செல்வி சுந்தரவல்லியாய்
அருந்தவம்புரிந்து குறமகளாய் மறு
பிறவி எடுத்த வள்ளியை மணந்த
திருத்தணிகை முருகா!
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவாசரணம்
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
ஆறெழுத்துள்ள உன்பேர்ஜெபிப்போர்க்கு
நீறுடன் பன்னீரிலைதனையருளி
தீராநோய்களைத் தீர்த்தருள்புரியும்
சீரலைவாய் முருகா!
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா, ஓம்சரவண பவாசரணம்
ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா,ஓம்சரவண பவா சரணம் ,
வேலவா!வா!!
கந்தன் என்றால் கருணை வடிவம்;
கார்த்திகேயன் காக்கும் தெய்வம்;
குமரன் அவனைக் கும்பிட்டு தினம்
கூவி அழைப்போம்;கூடி அழைப்போம்.
கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!
ஆலவாயானுக்கு ப்ரணவப்பொருள் சொன்ன
வேலவா!வடி வேலவா!
கோல மயிலேறி ஞாலம் வலம் வந்த
பாலனே!எனை ஆளவா!
கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!
அமரரைக்காக்க அசுரரைத்துணித்த
குமரேசா! வள்ளி மனவாசா !
தில்லை நடம் செய் கனக சபேசனின்
பிள்ளையே ! எனை ஆள வா!
கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!
மண்ணிலுதிர்த்த பழங்களை ஊதி
உண்ணச்சென்ற அவ்வைப்பாட்டியை
"பழம் சுடுதோ?"என்று குறும்பாய் வினவிய
குழந்தையே ! எனை ஆள வா!
கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!
"சரவணபவா" என்று தூய மனத்தோடு
ஒரு முறையே அழைத்தாலும்
சிறு குறையுமின்றி காத்தருள் புரிந்திடும்
கருணாகரா! எனை ஆள வா!
கந்தா........கடம்பா.....முருகா.... கதிர்வேலா!