அருள்வாய் முருகா!
ஒருமுகப் படுத்திய மனத்திலே முருகா!உன்
திருமுகங்காட்டியருள்வாயே !
இருமணங்கொண்டவா ! வள்ளிதேவயாநியுடன்
தரிசனந்தந்தெனக்கருள்வாயே!
முக்கண்ணனுக்கு பிரணவப் பொருளினைப்
பக்குவமாய்ச்ச்சொன்ன பாலகுரு!
நான்மறை போற்றிடும் நாயகா, எனக்குள்ளே
ஞான ஒளி ஈந்தருள்வாயே!
பஞ்சாம்ருத அபிஷேகப் பிரியா! என்
நெஞ்செல்லாம் நீ நிறைந்திடுவாயே!
ஆறெழுத்துள்ள உன்பேர் ஜெபித்தே கடை
தேறிடப்பேரருள் புரிவாயே!
ஏழேழ் பிறவியுமுன் இணையடி நிழலிலே
ஏழையேன் இருந்திட அருள்வாயே!
எட்டுக்குடிஅழகா!சட்டியின் நாயகா!
பொற்றாள்களில் புகல் தருவாயே!
ஒன்பது கோள்தரும் துன்பந்தவிர்த்தருளும்
தென்பழநியின் தண்டாயுதனே !
பத்தரின் மித்ரனே!பித்தனின் புத்ரனே!
முக்தியெனும் நிலை அருள்வாயே !
ஐயப்பசரித சாரம் [கதைப்பாட்டு]
[மெட்டு..நந்த வனத்திலோர் ஆண்டி ]
சாமியே ஐயப்பா,சரணம் ..தர்ம
சாஸ்தாவே,மணிகண்டா,சரணம்,சரணம்...[சாமியே..]
"அரியரன் மைந்தனால் மரணம்" ..என்ற
விதியாலே மகிஷி எனும் பேர்கொண்ட அசுரி
எருமை முகத்தினளாய் வந்து ..எங்கும்
திரிந்தாளாம் யாவர்க்கும் துன்பங்கள் தந்து..
சாமியே ஐயப்பா,சரணம்
மகிஷியின் தொல்லைதாங்காமல்...முப்பத்து
முக்கோடி தேவரும் திருமாலை வேண்ட ,
மோகினிவடிவில் முராரி ..அரனைக்
கூடவும் அவதரித்தான் குழந்தை மணிகண்டன்..
சாமியே ஐயப்பா,சரணம்
மகவற்ற பந்தளமன்னன்..மழலை
மணிகண்டனைத்தனது மகனாய் வளர்க்க ,
பிணியுற்ற தாயின்வலி போக்க ..சேயும்
வனம் நோக்கி விரைந்தானாம் புலிப்பாலுக்காக..
சாமியே ஐயப்பா,சரணம்
வனத்தினில் மகிஷியை வீழ்த்தி ..புலி
வாகனனாய் பாலகன் வருவதைக்கண்டு
"தெய்வமே இவன் '' என்றுணர்ந்து ..சரண்
எய்தினர் யாவரும் அவன்முன் விழுந்து .
சாமியே ஐயப்பா,சரணம்
அவதாரப்பணிமுடித்த அண்ணல் ..தான்
விடுங்கணை விழுமிடம் கோயில் எழுப்ப
பணித்தபின் கணைவிட்டு மறைய ..சபரி
கிரிமீது கணை விழக் கண்டானாம் வேந்தன்
சாமியே ஐயப்பா,சரணம்
மன்னன் முன் பொன்னம்பல மேட்டில்..அண்ணல்
தோன்றியே சக்தி ஆயுதம் ஒன்றை அருள ,
சமர்செய்த அமரர்கோன்தன்னை ..திவ்ய
சக்தி ஆயுதத்தாலே வென்றானாம் வேந்தன்..
சாமியே ஐயப்பா,சரணம்
தெய்வ மகன் பணித்தவாறே -மன்னன்
திருக்கோயில் பணிதனை மலையில்துவங்க,
அமரதச்சன் விஸ்வகர்மா..உதவி
அருளவும் முடிந்ததாம் ஆலயப்பணியும்..
சாமியே ஐயப்பா,சரணம்
மகரசங்கராந்தி சனிவாரம் ..சபரி
மலைமீதிலே பரசுராமரும் தோன்றி
சுபமுஹூர்த்தவேளைதனிலே ..செய்து
அருளினராம் ஐயப்ப விக்ரஹப்ரதிஷ்டை..
சாமியே ஐயப்பா,சரணம்
இறைச்சேயை மகனாய் வளர்த்த ..மன்னன்
இறைப் பணி நிறைவடைந்து முடிந்ததை எண்ணி
இன்பவெள்ளத்தில் திளைத்தே ..புனித
பம்பாநதிக்கரையில் அடைந்தான் சமாதி..
சாமியே ஐயப்பா,சரணம்
ஐயப்பசரிதையின் சாரம்..கூறும்
இக்கதைப்பாட்டிசைத்தவாறு மலையேறும்
அன்பர்க்கு மலராகும் முள்ளும்,.அவர்
உள்ளத்தில் பொங்கிடும் உத்சாக வெள்ளம்
சாமியே ஐயப்பா,சரணம்
மணிகண்டன் மகிமையுரைக்கும் ..இந்த
கதைப்பாட்டைப் பாடுவோர்க்குண்டு நற்கதியே ,
பாடுவதை மெய்யுருகிக்கேட்கும்..பக்தர்
மனத்தினில் நிறைந்தே நிலைக்கும் நிம்மதியே.
சாமியே ஐயப்பா,சரணம் ..தர்ம
சாஸ்தாவே,மணிகண்டா,சரணம்,சரணம்..
சாமியே. ஐயப்பா சரணம்
சாமியே சபரீசா சரணம்
சாமியே மணிகண்டா சரணம் .
வந்தான் முருகன்
அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,
அன்பர்தன் துன்பத்தை தீர்க்கவந்தான் முருகன்;
தீர்க்கவந்தான் முருகன்!
தந்தைதாயினைத் துறந்தான் -தென்
பழநிநோக்கிப் பறந்தான்;
தண்டபாணியாய் அமர்ந்தான்,-தூய
அன்பர்க்கு அருள்புரிந்தான்.
ஷண்முகன் ,சிவகுகன்,பாவைவள்ளியின் நாயகன்.
அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,
பிள்ளையாருக்குப் பின்னவன் -,பிரணவப்
பொருளை விளக்கிச்சொன்னவன்;
தேவயானி மனமோகனன்,-வண்ணத்
தோகைமயில் வாகனன்.
ஷண்முகன் ,சிவகுகன்,பாவைவள்ளியின் நாயகன்
அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,
பரமனின் ப்ரியபுதல்வன்,-அவன்
சுரசைன்யத்தின் முதல்வன்;
அபிராமவல்லி நந்தனன் ,-தீய
தாரகாசுர மர்த்தனன் .
ஷண்முகன் ,சிவகுகன்,பாவைவள்ளியின் நாயகன்.
அன்னையின் சக்திவேல் ஏந்திவந்தான் அழகன்,
அன்பர்தன் துன்பத்தை தீர்க்கவந்தான் முருகன்;
தீர்க்கவந்தான் முருகன்!