Wednesday, November 16, 2011

வேல் மகிமை

''மந்திரமாவது நீறே'' என்று  தொடங்கும்
திருநீற்றுப்பதிகப் பாடலைப்படித்ததும் அதே
நடையில் முருகனின் வேலைத்     துதிபாட
வேண்டும் என்று என்மனத்தில் எழுந்த   
விருப்பத்தின் விளைவு  கீழே! ]          
   


  வேல் மகிமை
(கந்தன் துதிப்பாடல்கள் வலையில் நம் சுப்புசார்
வேல் மகிமையைப்  பாடக்கேட்டு மகிழுங்கள் )


மந்திரமாவது வேலே,மனச்
சாந்தியளிப்பதும் வேலே!
சுந்தரமாவது வேலே,சுக
வாழ்வு கொடுப்பதும் வேலே!
தந்திரமாவது வேலே,தன
பாக்கியம் தருவதும் வேலே!
செந்தூரிலே கோயில்கொண்ட கந்தன்
ஏந்திநிற்கும்சக்திவேலே!

ஆதரவாவது வேலே,அல்லல்
அகற்றியருள்வதும் வேலே!
சோதனையாவையுந்தாண்டி நம்மைச்
சாதிக்கச்செய்வதும் வேலே!
பேதங்கள் யாவையும்போக்கி நெஞ்சில்  
நேயம் நிறைப்பதும் வேலே!
வேதங்கள் ஓதிடும் நாதன் விழி
ஜோதி விசாகனின் வேலே!

புத்தி திருத்திடும் வேலே,பொய்மை
போக்கும் புனிதனின் வேலே!
சக்தி  பெருக்கிடும் வேலே,சித்த
சுத்தமளித்திடும் வேலே!
பக்தியைத்தூண்டி மனத்தை மிகப்
பரவசமாக்கிடும் வேலே!
பித்தன் நெற்றிவிழிப்பொறியாய் உதித்த
முத்துக்குமரன் கைவேலே!

இட்டமாய் நாடிவந்தோரின் கட்டம்
யாவும் களைந்திடும் வேலே!
சட்டித்திதிக்கான தெய்வம் கந்தன்   
பொற்கரம்  தாங்கிடும் வேலே!
துட்டரைவென்று துறத்தித் தூயோர்
துயரந்துடைத்திடும் வேலே!
பட்டரின் சொல்லை மெய்ப்பித்த
அபிராமியளித்த அருள் வேலே !

1 comment:

  1. வேல் மகிமை மிக அருமை அம்மா! ஒவ்வொரு வரியும் கம்பீரமாய் ஒலிக்கிறது, வேலைப் போலவே.

    ReplyDelete