ஓம் சரவணபவ
( 'ஸ்டார் விஜய் 'இல் காலையில் 'அருணாசலசிவ....' கேட்டு
ரசித்துக்கொண்டிருக்கையில் அதே ராகத்தில் முருகனைப்பாடத்
தோன்றியது! எழுதிவிட்டேன் ;பாடிப்பாருங்களேன்! )
சரவணபவ எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை தினமோதுவோம்;
கருணையே வடிவமாம் குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம் நனைந்தாடுவோம்!
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
பண்டார வேசனாம்,ஞானப்ரகாசனாம்,
தென்பழனிவாசனின் பதம் நாடுவோம்;
குஞ்சரி நேசனாம்,குன்றக்குமரேசனாம்,
கொஞ்சும் வஞ்சிதாசனைக் கொண்டாடுவோம்!
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
சரவணபவ எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை தினமோதுவோம்;
கருணையே வடிவமாம் குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம் நனைந்தாடுவோம்!
தகதகதகவென நிகரற்ற ஒளியுடன்
திகழ்கின்ற வேல்தாங்கும் தயாபரன்,
ஜெகம்புகழ் ஷண்முகன்,மகிமையை எண்ணியெண்ணி
அகமகிழ்ந்தவனைத் துதிபடுவோம் !
ஒம்சரவணபவ,ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
சரவணபவ எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை தினமோதுவோம்;
கருணையே வடிவமாம் குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம் நனைந்தாடுவோம்!
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
[ ''மந்திரமாவது நீறே'' என்று தொடங்கும்
திருநீற்றுப்பதிகப் பாடலைப்படித்ததும் அதே
நடையில் முருகனின் வேலைத் துதிபாட
வேண்டும் என்று என்மனத்தில் எழுந்த
விருப்பத்தின் விளைவு கீழே! ]
வேல் மகிமை
(கந்தன் துதிப்பாடல்கள் வலையில் நம் சுப்புசார்
வேல் மகிமையைப் பாடக்கேட்டு மகிழுங்கள் )
மந்திரமாவது வேலே,மனச் சாந்தியளிப்பதும் வேலே!
சுந்தரமாவது வேலே,சுக
வாழ்வு கொடுப்பதும் வேலே!
தந்திரமாவது வேலே,தன
பாக்கியம் தருவதும் வேலே!
செந்தூரிலே கோயில்கொண்ட கந்தன்
ஏந்திநிற்கும்சக்திவேலே!
ஆதரவாவது வேலே,அல்லல்
அகற்றியருள்வதும் வேலே!
சோதனையாவையுந்தாண்டி நம்மைச்
சாதிக்கச்செய்வதும் வேலே!
பேதங்கள் யாவையும்போக்கி நெஞ்சில்
நேயம் நிறைப்பதும் வேலே!
வேதங்கள் ஓதிடும் நாதன் விழி
ஜோதி விசாகனின் வேலே!
புத்தி திருத்திடும் வேலே,பொய்மை
போக்கும் புனிதனின் வேலே!
சக்தி பெருக்கிடும் வேலே,சித்த
சுத்தமளித்திடும் வேலே!
பக்தியைத்தூண்டி மனத்தை மிகப்
பரவசமாக்கிடும் வேலே!
பித்தன் நெற்றிவிழிப்பொறியாய் உதித்த
முத்துக்குமரன் கைவேலே!
இட்டமாய் நாடிவந்தோரின் கட்டம்
யாவும் களைந்திடும் வேலே!
சட்டித்திதிக்கான தெய்வம் கந்தன்
பொற்கரம் தாங்கிடும் வேலே!
துட்டரைவென்று துறத்தித் தூயோர்
துயரந்துடைத்திடும் வேலே!
பட்டரின் சொல்லை மெய்ப்பித்த
அபிராமியளித்த அருள் வேலே !
ஞானமருள்வாய்,வேலவா!
நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!
வள்ளலே உன்திருமந்திரம் இனித்திடும் செந்தேன்,
உள்ளத்திலே அதனையோதி காத்துக் கிடந்தேன் ;
ஓம் சரவணபவா!
ஓம் சரவணபவா!
ஓம் சரவணபவா!
வள்ளலே உன்திருமந்திரம் இனித்திடும் செந்தேன்,
உள்ளத்திலேஅதனையோதிகாத்துக்கிடந்தேன் ;
காங்கேயா,கண்முன்வராமல் காக்கவைப்பதேன்?
ஏங்கும் ஏழை எந்தனுக்கு இறங்க மறுப்பதேன்?..நீ
ஏங்கும் ஏழை எந்தனுக்கு இறங்க மறுப்பதேன்?
நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!
ஏரகத்தில் பிரணவத்துக்கு விளக்கினாய் பொருள் ,
ஆறுமுகா,அகற்றிடுவாய்,அகத்துப்பேரிருள்;
ஞானமற்ற ஈனன் எனக்குன் பாதமே புகல் ;
தீனதயாளா,பொழிவாய் என்மேல் பேரருள்!..ஹே
தீனதயாளா,பொழிவாய் என்மேல் பேரருள்!
நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!