Saturday, October 15, 2011

துணைவன்

                                           

["வேயுறு தோளிபங்கன்" என்று தொடங்கும் 'கோளறுபதிகம்' (சிவத்துதி)போல் முருகனைத் துதிபாட என்மனத்தில் பொங்கிய ஆசையின் விளைவு கீழுள்ள முருகன் துதி ! அதே மெட்டில் பாடிப்பார்க்கலாம்!துணைவனை க்ளிக்கலாம்!]


               துணைவன்


அன்னை அபிராமிபாலன்,தென்பழநிவேலன்,
ஆண்டிபண்டாரக்கோலன்,
தண்டாயுதபாணியாக வெண்ணீறணிந்தென்
இதயம்பதிந்த அதனால் ,
ஒன்பதுகோள்களும் உற்ற நண்பராய் மாறி
துன்பந்தவிர்த்தருளும் ;
இன்னல் என்பதே இல்லை,இன்பமே என்றும்
அண்ணலின் பொன்னடி பணிந்தால் !


 
திருவேரகத்தில் பிரணவ விளக்கமளித்த
பரமகுரு ஸ்வாமிநாதன் ,
குறுநகைசிந்தும் சிறுகுழந்தையாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால்,
வருகின்ற நாட்கள்யாவும் திருநாட்களாகும்;
ஒருநாளும் சிறுமை இல்லை;
பொருள்வளம் பெருகியோங்கும், வறுமையும் நீங்கும்,
குருநாதன் திருவடி பணிந்தால் !


அமரரைக்காக்கப் போரில் அசுரரையழித்து
அ மர்ந்ததிருச்செந்தில்வேலன்
நிமலநீறீந்து நோய்கள் நீக்குந்தெய்வமாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால் ,
ஈசனும் கேசவனும் அயனும் வாசவனும்
அன்போடு ஆசியருள்வர்;
பாசம்வீசும் காலனும் ,காவலனாய் ஆவான்
வேலவனின் விரைகழல் பணிந்தால் !


திருப்பரங்குன்றந்தனிலே மணக்கோலம் பூண்ட
சரவணபவன் சண்முகன்
சுரமகள் தேவயானை மணவாளனாய் என்
இதயம் பதிந்த அதனால்
உமையவள்,கமலை,வாணி உவந்தருள்வர் ஆசி;
நமதுநிழ்ல்போல் துணைவருவர்;
மனம்போல மாங்கல்யமும் ,மணவாழ்வும் அமையும்
குமரேசன் மலர்க்கழல் பணிந்தால் !


கிழவனாய் வள்ளியோடு லீலைகள்செய்த
பழமுதிர்ச்சோலை வேலன்
கஜம் கண்டோடும்வள்ளிக்கு சரணளிப்பவனாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால்
கொடியகாட்டுவிலங்கும் கொட்டுங்கருந்தேளும்
படமெடுத்தாடும்பாம்பும்
வழிவிட்டு விலகியோடும்,இடர்யாவும் நீங்கும்
அழகனின் திருக்கழல் தொழுதால் !


தணிகாசலந்தனிலே குறமகள்தன்னை
மணங்கொண்ட வேல்முருகன்
வள்ளிகைத்தலம்பற்றும் மணவாளனாய் என்
இதயம்பதிந்த அதனால்
மனபலம் கூடும் தேகநலனும் சீராகும்
மனமலம் மாய்ந்தகலும் ;
நினைத்தவை நடந்தேறும்,தனதான்யம் சேரும்
புனிதனின் பொன்னடி பணிந்தால் !



           ஓம் சரவணபவா !

          ஓம் சரவணபவா !

          ஓம் சரவணபவா !

No comments:

Post a Comment