படத்துக்கு நன்றி: http://photobucket.com/images/women%20power/
உமை கவிதை செய்கின்றாள் !
(பாரதியாரின் பிறந்தநாளான இன்று (11-12-12)
பாஞ்சாலி சபதத்தில் "மாலை வருணனை "யில்
ஒரு பகுதி கீழே:)
பாரடியோ!வானத்திற் புதுமையெல்லாம் .
பண்மொழீ !கணந்தோறும் மாறி மாறி
ஓரடி மற்றோரடியோ டொத்தலின்றி
உவகையுற நவநவமாத் தோன்றுங் காட்சி;
யாரடி இங்கிவைபோலப் புவியின் மீதே
எண்ணரியப் பொருள் கொடுத்தும் இயற்றவல்லார் !
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக்காண்பாய் !
கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் ;
கணந்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும்
கருதிடவும் சொல்லிடவும் எளியதோ?ஆங்கே ,
கணந்தோறும் ஒரு புதிய வண்ணங்காட்டி
காளிபராசக்தி அவள் களிக்குங்கோலம்
கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக்காண்பாய்.
அடிவானத்தே அங்கு பரிதிக்கோளம்
அளப்பரிய விரைவினோடு சுழலக் காண்பாய் .
இடிவானத்தொளிமின்னல் பத்துக்கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து ,
முடிவானவட்டத்தைக்காளி ஆங்கே
மொய்குழலாய்!சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவானதொன்றாகத் தகடிரண்டு
வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.
அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே
அசைவுறுமோர் மின்செய்த வட்டு;முன்னே ,
சமையுமொரு பச்சைநிற வட்டங்காண்பாய்;
தரணியிலிங்கிதுபோலோர் பசுமைஉண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக்கால்கள்
எண்ணில்லாதிடையிடையே எழுதல் காண்பாய்.
உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே
உரைத்திடுவோம்,"பல்லாண்டு வாழ்க!"என்றே.