Monday, November 28, 2011

ஓம் சரவணபவ



                 ஓம் சரவணபவ

(  'ஸ்டார்  விஜய் 'இல் காலையில்  'அருணாசலசிவ....' கேட்டு
ரசித்துக்கொண்டிருக்கையில்  அதே ராகத்தில்  முருகனைப்பாடத்
தோன்றியது! எழுதிவிட்டேன் ;பாடிப்பாருங்களேன்!  )


சரவணபவ  எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை  தினமோதுவோம்;
கருணையே வடிவமாம்  குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம்  நனைந்தாடுவோம்!

ஒம்சரவணபவ  ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

பண்டார வேசனாம்,ஞானப்ரகாசனாம்,
தென்பழனிவாசனின்  பதம் நாடுவோம்;
குஞ்சரி நேசனாம்,குன்றக்குமரேசனாம்,
கொஞ்சும் வஞ்சிதாசனைக் கொண்டாடுவோம்!

ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

சரவணபவ எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை தினமோதுவோம்;
கருணையே வடிவமாம் குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம் நனைந்தாடுவோம்!

தகதகதகவென நிகரற்ற ஒளியுடன்
திகழ்கின்ற  வேல்தாங்கும் தயாபரன்,
ஜெகம்புகழ் ஷண்முகன்,மகிமையை எண்ணியெண்ணி
அகமகிழ்ந்தவனைத் துதிபடுவோம் !

ஒம்சரவணபவ,ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

சரவணபவ எனும் முருகனின் நாமமாம்
திருமந்திரந்தனை தினமோதுவோம்;
கருணையே வடிவமாம் குருகுகன் பொழிந்திடும்
அருள்மழைதனில் நாம் நனைந்தாடுவோம்!

ஒம்சரவணபவ ஒம்சரவணபவ
ஒம்சரவணபவ ஒம்சரவணபவ

Wednesday, November 16, 2011

வேல் மகிமை

[ ''மந்திரமாவது நீறே'' என்று  தொடங்கும்
திருநீற்றுப்பதிகப் பாடலைப்படித்ததும் அதே
நடையில் முருகனின் வேலைத்     துதிபாட
வேண்டும் என்று என்மனத்தில் எழுந்த   
விருப்பத்தின் விளைவு  கீழே! ]          
   


  வேல் மகிமை
(கந்தன் துதிப்பாடல்கள் வலையில் நம் சுப்புசார்
வேல் மகிமையைப்  பாடக்கேட்டு மகிழுங்கள் )


மந்திரமாவது வேலே,மனச்
சாந்தியளிப்பதும் வேலே!
சுந்தரமாவது வேலே,சுக
வாழ்வு கொடுப்பதும் வேலே!
தந்திரமாவது வேலே,தன
பாக்கியம் தருவதும் வேலே!
செந்தூரிலே கோயில்கொண்ட கந்தன்
ஏந்திநிற்கும்சக்திவேலே!

ஆதரவாவது வேலே,அல்லல்
அகற்றியருள்வதும் வேலே!
சோதனையாவையுந்தாண்டி நம்மைச்
சாதிக்கச்செய்வதும் வேலே!
பேதங்கள் யாவையும்போக்கி நெஞ்சில்  
நேயம் நிறைப்பதும் வேலே!
வேதங்கள் ஓதிடும் நாதன் விழி
ஜோதி விசாகனின் வேலே!

புத்தி திருத்திடும் வேலே,பொய்மை
போக்கும் புனிதனின் வேலே!
சக்தி  பெருக்கிடும் வேலே,சித்த
சுத்தமளித்திடும் வேலே!
பக்தியைத்தூண்டி மனத்தை மிகப்
பரவசமாக்கிடும் வேலே!
பித்தன் நெற்றிவிழிப்பொறியாய் உதித்த
முத்துக்குமரன் கைவேலே!

இட்டமாய் நாடிவந்தோரின் கட்டம்
யாவும் களைந்திடும் வேலே!
சட்டித்திதிக்கான தெய்வம் கந்தன்   
பொற்கரம்  தாங்கிடும் வேலே!
துட்டரைவென்று துறத்தித் தூயோர்
துயரந்துடைத்திடும் வேலே!
பட்டரின் சொல்லை மெய்ப்பித்த
அபிராமியளித்த அருள் வேலே !

Friday, November 11, 2011

ஞானமருள்வாய்,வேலவா!

       ஞானமருள்வாய்,வேலவா! 



நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!

வள்ளலே உன்திருமந்திரம் இனித்திடும் செந்தேன்,
உள்ளத்திலே அதனையோதி காத்துக் கிடந்தேன் ;

ஓம் சரவணபவா!
ஓம் சரவணபவா!
ஓம் சரவணபவா!

வள்ளலே உன்திருமந்திரம் இனித்திடும் செந்தேன்,
உள்ளத்திலேஅதனையோதிகாத்துக்கிடந்தேன் ;

காங்கேயா,கண்முன்வராமல் காக்கவைப்பதேன்?
ஏங்கும் ஏழை எந்தனுக்கு இறங்க மறுப்பதேன்?..நீ
ஏங்கும் ஏழை எந்தனுக்கு இறங்க மறுப்பதேன்?

 நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!

ஏரகத்தில் பிரணவத்துக்கு விளக்கினாய் பொருள் ,
ஆறுமுகா,அகற்றிடுவாய்,அகத்துப்பேரிருள்;
ஞானமற்ற ஈனன் எனக்குன் பாதமே புகல்  ;
தீனதயாளா,பொழிவாய் என்மேல் பேரருள்!..ஹே
தீனதயாளா,பொழிவாய் என்மேல் பேரருள்!

நீலகண்டன் நேத்திரத்தில் உதித்தவேலவா!
நீலமயில் வாகனனே வேதமூலவா,
நீலமேகவண்ணன் மருகா,வேகமாக வா-நீ
வேலைஏந்தி என்னுள் ஞான ஒளியூட்ட வா!

Monday, October 31, 2011

தரிசனம் தா,கந்தா!

          தரிசனம் தா,கந்தா!
 [மெட்டு..ஆர்ட் ஆப் லிவிங் பஜன்.."கோபாலா,கோபாலா.".]


 

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

ஆவினன்குடியின் கோவணாண்டியே!வா!
ஏரகத்தின் ஸ்வாமிநாதஸ்வாமியே !வா!
சீரலைவாய் செந்தில்நாதனே!வா!
பரங்குன்றத்து சுரமகள் நாயகா!வா!
பழமுதிர்ச்சோலை வஞ்சி நேசா!வா!
திருத்தணிகைமலை வள்ளீசா!வா!

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

காங்கேயா!கந்தா!கண்மணியே!வா,
ஓங்காரம் விளக்கிய குருகுகா!,வா,
ஓங்கி உலகளந்தவனின் மருகா!வா,
ஏங்கும் எங்களுக்காக இறங்கி நீ வா...இன்னும்
தாங்காதையா,திவ்யதரிசனம் தா!

கோலமயில் ஏறிவரும் வேலா!குணசீலா!
நீலகண்டன் நுதற்கண்ணிலுதித்த சிவபாலா !
அபிராமவல்லி நந்தனா,வள்ளிமனோஹரா,வா!வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!
வீரா,தீரா,சூரசம்ஹாரா,தீனதயாபரா,வா!

Friday, October 28, 2011

அன்பர்க்கருள்புரிவாய்,கந்தா!

அன்பர்க்கருள்புரிவாய்,கந்தா!

  
பன்னிருகரத்தவா! திருநீறு தரித்தவா!
தென்னகம் வந்தமர்ந்தருள்வோனே!
உன்னடிபற்றியே பணிந்திடும் பக்தரின்
முன்னைவினையறுத்தருள்வாயே !

தடைகள்தகர்த்திடும் கணபதி தம்பியே!
விடைவாகனனின் குருநாதா!
படைவீடாறுடைக்கடவுளே! பக்தர்க்கு
அடைக்கலம் தந்தருள் புரிவாயே!

மத்தமாலை முடிசூடிடும் பித்தனின்
புத்திரமணியே! முத்தையா!
சக்திவேலாயுதா! நித்தமுனைத் தொழும்
பக்தர்க்கு முக்திதந்தருள்வாயே !

மாசில்மதியோடு நதிமுடிசூடிடும்
ஈசனிடமுறை உமையாள் மைந்தா!
நேசமாய் நிதமுமுன் நாமம் நவின்றிடும்
தாசர்க்கு தரிசனம் தருவாயே!

பாரதப்போரினில் பார்த்தனின்தேருக்கு
சாரதியான மாதவன்  மருகா!
ஆறேழுத்துள்ள உன்பேரினை பக்தியாய்க்
கூறுமன்பர்க்கருள்புரிவாயே !

வேட்டுவன்மகளையும் வாசவன்மகளையும்
நாடி மணங்கொண்ட நாயகனே!
ஈடிணையற்ற உன் இணையடிபோற்றியே
பாடுமன்பர்க்கருள்புரிவாயே !
=============================================================

Saturday, October 15, 2011

துணைவன்

                                           

["வேயுறு தோளிபங்கன்" என்று தொடங்கும் 'கோளறுபதிகம்' (சிவத்துதி)போல் முருகனைத் துதிபாட என்மனத்தில் பொங்கிய ஆசையின் விளைவு கீழுள்ள முருகன் துதி ! அதே மெட்டில் பாடிப்பார்க்கலாம்!துணைவனை க்ளிக்கலாம்!]


               துணைவன்


அன்னை அபிராமிபாலன்,தென்பழநிவேலன்,
ஆண்டிபண்டாரக்கோலன்,
தண்டாயுதபாணியாக வெண்ணீறணிந்தென்
இதயம்பதிந்த அதனால் ,
ஒன்பதுகோள்களும் உற்ற நண்பராய் மாறி
துன்பந்தவிர்த்தருளும் ;
இன்னல் என்பதே இல்லை,இன்பமே என்றும்
அண்ணலின் பொன்னடி பணிந்தால் !


 
திருவேரகத்தில் பிரணவ விளக்கமளித்த
பரமகுரு ஸ்வாமிநாதன் ,
குறுநகைசிந்தும் சிறுகுழந்தையாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால்,
வருகின்ற நாட்கள்யாவும் திருநாட்களாகும்;
ஒருநாளும் சிறுமை இல்லை;
பொருள்வளம் பெருகியோங்கும், வறுமையும் நீங்கும்,
குருநாதன் திருவடி பணிந்தால் !


அமரரைக்காக்கப் போரில் அசுரரையழித்து
அ மர்ந்ததிருச்செந்தில்வேலன்
நிமலநீறீந்து நோய்கள் நீக்குந்தெய்வமாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால் ,
ஈசனும் கேசவனும் அயனும் வாசவனும்
அன்போடு ஆசியருள்வர்;
பாசம்வீசும் காலனும் ,காவலனாய் ஆவான்
வேலவனின் விரைகழல் பணிந்தால் !


திருப்பரங்குன்றந்தனிலே மணக்கோலம் பூண்ட
சரவணபவன் சண்முகன்
சுரமகள் தேவயானை மணவாளனாய் என்
இதயம் பதிந்த அதனால்
உமையவள்,கமலை,வாணி உவந்தருள்வர் ஆசி;
நமதுநிழ்ல்போல் துணைவருவர்;
மனம்போல மாங்கல்யமும் ,மணவாழ்வும் அமையும்
குமரேசன் மலர்க்கழல் பணிந்தால் !


கிழவனாய் வள்ளியோடு லீலைகள்செய்த
பழமுதிர்ச்சோலை வேலன்
கஜம் கண்டோடும்வள்ளிக்கு சரணளிப்பவனாய் எந்தன்
இதயம்பதிந்த அதனால்
கொடியகாட்டுவிலங்கும் கொட்டுங்கருந்தேளும்
படமெடுத்தாடும்பாம்பும்
வழிவிட்டு விலகியோடும்,இடர்யாவும் நீங்கும்
அழகனின் திருக்கழல் தொழுதால் !


தணிகாசலந்தனிலே குறமகள்தன்னை
மணங்கொண்ட வேல்முருகன்
வள்ளிகைத்தலம்பற்றும் மணவாளனாய் என்
இதயம்பதிந்த அதனால்
மனபலம் கூடும் தேகநலனும் சீராகும்
மனமலம் மாய்ந்தகலும் ;
நினைத்தவை நடந்தேறும்,தனதான்யம் சேரும்
புனிதனின் பொன்னடி பணிந்தால் !



           ஓம் சரவணபவா !

          ஓம் சரவணபவா !

          ஓம் சரவணபவா !

Wednesday, October 5, 2011

கொலுவிருப்பாய் கலைவாணி !


 
                                     


                                  வாகீஸ்வரி ! வீணாபாணி !
                                  கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி ! 

                                  தூயவெண் தாமரை  வாசினியே!
                                  மாசில் வெண்  அன்ன வாகினியே!
                                  படைக்கும் கடவுளின் பத்தினியே!
                                  கலைகள் யாவுக்கும் அதிபதி நீயே!

                                 வாகீஸ்வரி ! வீணாபாணி !

                                 கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !


                                 ஏட்டுச்சுவடியும் அக்ஷரமாலையும்
                                 ஏந்தும் கரமுடைய எங்கள் தாயே !
                                 ஸ்ருங்ககிரி அமர் சாரதையே !
                                 வந்தருள்புரிவாய் பாரதியே!

                                 வாகீஸ்வரி ! வீணாபாணி !

                                 கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !

                                  வெண்ணுடையணிந்து ஒளிர்பவளே!
                                  மெய்ஞானம் தரும் கலைமகளே!
                                  உன்னருட்பார்வை ஒருகணம் பட்டால்
                                  மந்தியும் மேதையாய் மாறிடுமன்றோ?


                                 வாகீஸ்வரி ! வீணாபாணி !

                                 கொலுவிருந்தருள்வாய்,கலைவாணி !