Sunday, March 10, 2013

ஜம்புகேஸ்வர ஸ்தோத்ரம்

 

ஜம்புகேஸ்வர ஸ்தோத்ரம் 
(SUBBUSIR  sings:
http://www.youtube.com/watch?v=IJLCeBQNCuY&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1 )

லலாட லோசன ஜ்வாலா  நிர்தக்த   ஸ்மர  விக்ரஹ |
நமஸ்தே கரிசர்மாத்த வாஸஸே க்ருத்தி வாஸஸே||

கரும்புவில்லேந்தும் காமனைக் கனல்விழியால் 
                எரித்தவா!யானையூரீசா!
சரணமையா !கரித்தோலினை ஆடையாய்த்  
                 தரித்தவா!க்ருத்திவாசா !

யஸ்சார்மணேன  பததஸ் சக்ஷூஷீ  நீலலோஹித | 
தத்தாம பவதோ நித்யம் சதா பஸ்ச்யந்தி ஸூரய:||

பாரோர் புறக்கண்ணால் பார்க்க இயலா உன் 
                பேரொளி வீசும் உருவை ,
பற்றறுத்தஞானியர் அகக்கண்களால் கண்டு 
               களித்திருப்பர் காலமெல்லாம்.

ஸ்ருஷ்ட்யர்த்தம் பிரம்ம ரூபஸ்ஸன் ஸ்தித்யர்த்தம் ஜகதாமபி|
தவைவ ஹரநித்யோயம் ஆத்மா நாராயண:பர:|| 

ஆக்குந்தொழில் புரிய வாகீசன் வடிவெடுத்த 
            அருட்பெருஞ்ஜோதிச் சுடரே!
ஆக்கிய அனைத்தையும் அரிவடிவிலே வந்து
             காத்தருளும் கருணைக் கடலே! 

அம்ருதேஸ்வர பூதேச ஸ்ருஷ்டி ஸ்தித்யந்த காரண|
யத்தவ  ஸ்தானமனகம் தத்விஷ்ணோ :பரமம் பதம் ||

அப்புலிங்கமாய் ஆனைக் காவில் அருள்பவனே!
             பூதகணங்களின் தலைவனே!
முத்தொழிலுக்கும் காரணனே!உன்தலம் 
             நாடிடுவான்  நாரணனே! 

பக்தாந்த:கருணாம்போஜ விகாஸன கரத்விஷே|
அம்ருதேச நமஸ்தேஸ்து ருத்ராய ஸ்திர தன்வனே||

இதயந்தனை ஈர்த்து அடியார் அகங்குளிர 
            அருளும் அம்ருதேச்வரா!
எதிரி நடுநடுங்க வில்லேந்தி காட்சிதரும் 
            ருத்திரனே!மகேஸ்வரா!

ஜடாமகுட நிஷ்யந்த கங்கா ரிங்கத் ஸுதாம்சவே|
நமோ அம்ருதஸ்வரூபாய லிங்காயாமல தேஜஸே||

பொங்கிவரும் கங்கையை தடுத்திட மதியினை 
            சிரந்தனில் தரித்த சிவனே!
ஜம்புலிங்கமாய்  ஜொலிக்கும் ஜோதியே!எளியனுக்கு 
           அரணுந்தன்  தூய பதமே!

அமராதிப கோடீர நிர்க்ருஷ்டாங்க்ரி ஸரோருஹ |
ஸ்வபக்த ஜனுஷே துப்யம் மஹஸே மஹதே நம:||

வணங்கும் வாசவனின் மகுடம் மெல்ல வருட
                       விளங்கும் மலர்ப்பாதனே! 
சரணம்,அன்பர்க்கு லிங்கமாய்  திருக்காட்சி  
                      அருளும் ஜம்புநாதனே!

தீவ்யத்ஸுராசஸுர வதூ சீமந்த மணி ரஷ்மிபி:|
நீராஜித பதாப்ஜாய  தேவாய மஹதே நம :|| 

உனைப் பணிந்திடும் தேவ அசுர அணங்குகள் 
                   அணியும் ரத்னமணி ஒளியிலே 
நனைந்து நீராடிடும் நின் மலர்ப்பதங்களை 
                    பணிகின்றேன் ,பரமேஸ்வரா !


            




           





 

Monday, February 25, 2013

அழகா !வா!


அழகா !வா!
(SUBBUSIR sings:
http://www.youtube.com/watch?v=ZLZJ9NlBN9Q&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1

கயிலாய நாதருக்கு  
உயிரொலியை விளக்கியவா !
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண 
மயிலேறி  முருகா !வா!வா !

மங்களச் செவ்வாய்க்கோள் கவ்விய வெண்திங்களென 
குங்குமச்செந்நிற முகத்தில் வெண்ணீற்று நுதல் ஒளிர 
சிங்கார வேலா நீவா !-சிவ
சங்கரியின் செல்வா நீவா!
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

தன்னினமென்றே மயங்கி விண்மீன்கள் அண்மைவர
மின்னும் பன்னிரு விழிகள் தண்ணருளைத்தான் பொழிய
கங்காதரன் மகனே !வா!-சூர 
சங்காரம் செய்தவனே!வா!
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

தையல் தேவகுஞ்சரியும் ஒயிலாய் ஒருபுறமிருக்க,
மையலிலே மான்மகளும் மயங்கி மறுபுறமிருக்க,
ஒய்யார நடைபோட்டு வா !இந்த 
வையமெல்லாம் உய்ய நீ வா!
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

கயிலாய நாதருக்கு
உயிரொலியை விளக்கியவா !
அயிலேந்தி அழகா வா!வா!!-வண்ண
மயிலேறி முருகா !வா!வா !

Sunday, January 27, 2013

அன்னை அளித்த அருள் வேல்!


அன்னை அளித்த அருள் வேல்!
(A.O.L"ஜெய்,ஜெய் ராதா ரமண ஹரி போல் " என்ற

பஜனைப்பாட்டின் மெட்டு இந்தப் பாட்டுக்கு பொருந்தும் ;
பாடிப்பாருங்க வேலவனை நினைத்தபடி !)
 

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!
முன்னைவினையாவையும் முறிக்கும்வேல்!
இன்னல்நீக்கி இதமளிக்கும் வேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!

அருள்வேல்,அழகுவேல்,
முனைவேல்,முருகன்வேல்!
பெருவேல்,புனிதவேல்,
திருவேல்,துணைவன் வேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!

ஆறுபடைவீடமரும் குகன்வேல்!
ஈராறுகண்ணனின் கதிர்வேல்!
நீறணியும் நிமலன் வீரவேல்!
ஸுரசம்ஹாரனின் சக்திவேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!

கூர்வேல்,குகன்வேல்,
கதிர்வேல்,குமரன்வேல்!
வீரவேல்,வெற்றிவேல்,
தூய வேல்,திவ்ய வேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!

வள்ளிமணவாளனின் வல்வேல்!
தேவயானிநேசனின் நல்வேல்!
அண்டினோர்க்கருளும் கருணைவேல்!
கண்கண்டகடவுள் கந்தன்வேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!

வல்வேல்,வெள்ளிவேல்,
நல்வேல்,வஜ்ரவேல்!
வடிவேல், கருணைவேல்,
கந்தன்வேல்,கனகவேல்!

அன்னை அன்பாய் அளித்த அருள்வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!
வண்ணமயில்வாகனன் விசாகன் வேல்!


Tuesday, December 11, 2012

உமை கவிதை செய்கின்றாள் !

           [Bharathi.jpg]
படத்துக்கு நன்றி: http://photobucket.com/images/women%20power/

உமை கவிதை செய்கின்றாள் !
(பாரதியாரின்  பிறந்தநாளான  இன்று (11-12-12)
பாஞ்சாலி சபதத்தில் "மாலை வருணனை "யில்  
ஒரு பகுதி கீழே:)

பாரடியோ!வானத்திற் புதுமையெல்லாம் .
        பண்மொழீ !கணந்தோறும் மாறி மாறி
ஓரடி மற்றோரடியோ டொத்தலின்றி
       உவகையுற நவநவமாத் தோன்றுங் காட்சி;
யாரடி இங்கிவைபோலப் புவியின் மீதே
      எண்ணரியப் பொருள் கொடுத்தும் இயற்றவல்லார் !
சீரடியால் பழவேத முனிவர் போற்றுஞ்
     செழுஞ்சோதி வனப்பையெல்லாம் சேரக்காண்பாய் !

கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
      கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும் ;
கணந்தோறும் நவநவமாம் களிப்பு தோன்றும்
      கருதிடவும் சொல்லிடவும் எளியதோ?ஆங்கே ,
கணந்தோறும் ஒரு புதிய வண்ணங்காட்டி
      காளிபராசக்தி அவள் களிக்குங்கோலம்
கணந்தோறும் அவள் பிறப்பாள் என்று மேலோர்
      கருதுவதன் விளக்கத்தை இங்குக்காண்பாய்.

அடிவானத்தே அங்கு பரிதிக்கோளம்
        அளப்பரிய விரைவினோடு சுழலக் காண்பாய் .
இடிவானத்தொளிமின்னல் பத்துக்கோடி
         எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து ,
முடிவானவட்டத்தைக்காளி ஆங்கே
       மொய்குழலாய்!சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!
வடிவானதொன்றாகத் தகடிரண்டு
        வட்டமுறச் சுழலுவதை வளைந்து காண்பாய்.

அமைதியோடு பார்த்திடுவாய் மின்னே!பின்னே 
          அசைவுறுமோர் மின்செய்த வட்டு;முன்னே ,
சமையுமொரு பச்சைநிற வட்டங்காண்பாய்;
           தரணியிலிங்கிதுபோலோர்  பசுமைஉண்டோ?
இமைகுவிய மின்வட்டின் வயிரக்கால்கள் 
            எண்ணில்லாதிடையிடையே எழுதல் காண்பாய்.
உமை கவிதை செய்கின்றாள்,எழுந்து நின்றே 
உரைத்திடுவோம்,"பல்லாண்டு வாழ்க!"என்றே.
         









 

Tuesday, November 27, 2012

கார்த்திகை பஜனைப்பாட்டு

 
கார்த்திகை பஜனைப்பாட்டு
(Subbusir sings:
http://www.youtube.com/watch?v=yUMK8rcZeDY&feature=player_embedded)

அகல் விளக்கு ஏற்றி வைத்தோம் ,அலைவாய் அழகா!
அஞ்ஞான இருள் அழிப்பாய் ,குன்றாடும் குழகா!
தினையுடன் தேன் உனக்களித்தோம் ,வனமாலிமருகா!
துணைவருவாய் ,வினையறுப்பாய்,முனைவேல்முருகா!
அலைவாய் அழகா!குன்றாடும் குழகா!
வனமாலிமருகா!முனைவேல்முருகா!

ஜகம்புகழும் சிவைமகனே!சுப்பிரமணியா!
தகப்பனுக்குப் பாடஞ்சொன்ன ஒப்பற்ற தனயா!
திகழாறு முகத்தானே!கார்த்திகேயா !
அகம் அமர்ந்து சுகமருள்வாய்,காங்கேயா!
சுப்பிரமணியா!  ஒப்பற்ற தனயா!
கார்த்திகேயா !காங்கேயா!

குஞ்சிதபாதன்மைந்தா!குஞ்சரி காந்தா!
வஞ்சிநாதா!குறிஞ்சிவேந்தா!சண்முகசேந்தா!
சிந்தையிலுன் மந்திரமே,கந்தா!அனந்தா!
உந்தன் திருக்காட்சி தினம் காணும் வரம்தா!
குஞ்சரி காந்தா!சண்முகசேந்தா!
கந்தா!அனந்தா!காணும் வரம்தா!
உனைக்காணும் வரம் தா !
தினம் காணும் வரம் தா!
















 

Monday, November 19, 2012

ஷண்முகனுக்கு ஷடாக்ஷரத்துதி




ஷண்முகனுக்கு ஷடாக்ஷரத்துதி 

சக்தி  புத்திரனை சித்தத்தில் நிறைப்போம் .
சதாசிவமகனின் திருத்துதி இசைப்போம் .
சண்முகன் நந்நாமம் நெஞ்சில் நினைப்போம் .
சகாரமுறை குகன் மந்திரம் உரைப்போம்.

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

ரத்தவர்ணனவன் திருப்பதம்  தொழுவோம் .
ரங்கன் மருகனவன் திருப்பெயர் மொழிவோம் .
ரத்னவேலுடையோன் முன் கை குவிப்போம்.
ரகாரமுறை குகன் மந்திரம் ஜெபிப்போம் .

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

வள்ளிநாயகன் பதம் இதயத்தில் பதிப்போம்.
வரதாயகன்  புகழ் பாடித் துதிப்போம்.
வடிவேலவன் நாமம் நாளெல்லாம் நவில்வோம்.
வகாரமுறை குகன் மந்திரம் பயில்வோம்.

சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

கணபதிக்கிளையோனின்  வெண்ணீறு  அணிவோம் .
குணக்குன்றாம் குமரனின் இணையடி பணிவோம்.
தணலாய் உதித்தோன்  அருட்சுனையினில் நனைவோம் .
ணகாரமுறை குகன் மந்திரம் நவில்வோம் .

சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ ஓம் சரவணபவ ஓம்

பரமகுருவின் திருப்பொடி  புனைந்திடுவோம். 
பன்னிருகண்ணனின் பதம் பரவிடுவோம். 
பக்தவத்சலனைப் பாடிப் போற்றிடுவோம். 
பகாரமுறைவோன் பேர்  உருவேற்றிடுவோம். 

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்


வண்ணமயில் வாகனனை வணங்கிடுவோம். 
வல்வினையறுப்போனை  வழிபடுவோம். 
வள்ளலை வாழ்த்தித் துதி பாடிடுவோம்.
வகாரமுறைவோன் மந்திரம் ஓதிடுவோம்.  

சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்




 

Saturday, November 17, 2012

ஈசன்மகனே !வா!





ஈசன்மகனே !வா!
(Subbusir sings:
http://www.youtube.com/watch?v=8Z13vf2HFhY&feature=em-share_video_user )

 பாசத்தினைப் பிசைந்தேன் , பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
நேசமனமடியமர்த்தி ஆசையாய் ஊட்டிவிடக் 
காத்திருக்கேன் ;நீ புசிக்கவா!

கயிலாயரின்  அழல் நயனத்தில் பூத்தவனே!
கயல்விழியாள் தவப்பயனே!வா!
உயிரொலியின் பொருள் வினவி,அயனின் செருக்கழித்தவனே!
மயிலேறி நீ விரைந்து வா!

பாசத்தினைப் பிசைந்தேன் ,பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!

வெண்ணீற்று மணங்கமழும்  பொன்னெழில் மேனியனே!
பன்னிருகண்ணனே!வா!
மின்னலென  ஒளிரும் உன்னன்னையின்  வேலேந்தி 
கண்மணியே!சுப்ரமணியா!வா!

பாசத்தினைப் பிசைந்தேன், பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!

ஈசனுக்கு  ஏரகத்தில்   ஆசானாய்ப்  பாடஞ்சொன்ன 
மாசில்லாமணியே !நீவா!
காழிச்சேயாய்த் தமிழில் வீழிநாதன்  புகழிசைத்த 
வேலாயுதா !வேகம் வா !

பாசத்தினைப் பிசைந்தேன் , பாமலர்த்தேனூற்றி ;
ஈசன்மகனே !ருசிக்க வா!
நேசமனமடியமர்த்தி ஆசையாய் ஊட்டிவிடக்
காத்திருக்கேன் ;நீ புசிக்கவா!