Wednesday, August 31, 2011

ஷோடசநாம மகிமை




ஷோடசநாம மகிமை



வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                          சுமுகா! உந்தன் சுந்தரநாமம்
                         செப்பிட சித்திக்கும் ஞானப்ரகாசம்;
                         ஏகதந்தா! உன் இணை இல்லா நாமம்
                         இசைப்போர் உள்ளத்தில் பொங்கும்பரவசம்.!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                           கபிலா! உந்தன் கனிரசநாமம்
                           கூறிடக்கிடைக்கும் உன் கருணாகடாக்ஷம்;
                           கஜகர்ணா! உன்கவின்மிகுநாமம்
                           பாடிடக்கூடிடும் முடிவினில் மோக்ஷம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                            லம்போதரா!உன் நிர்மல நாமம்
                            நவின்றிட நிலைத்திடும் நித்யானந்தம்;
                           விகடா!உந்தன் உன்னத நாமம்
                           உரைப்பவருள்ளத்தில் உறைந்திடும் சாந்தம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                              விக்னராஜா!உன் நிகரில்லாநாமம்
                              பயின்றிடக்கரைந்திடும் பண்ணிய பாவம்;
                              விநாயகா!உன் இன்சுவைநாமம்
                              மொழிந்திட முறிந்திடும் முன்வினை யாவும்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                தூமகேது!உன் தேவாம்ருத நாமம்
                                தோத்தரித்தாலுண்டு துக்கநிவாரணம்;
                                கணாத்யக்ஷா!உன் கல்கண்டுநாமம்
                               ஒன்றே விக்னவிநாச காரணம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 பாலச்சந்த்ரா!உன் புண்ணியநாமம்
                                 பயின்று பணிந்தோம் உன்மலர்ப்பாதம்;
                                 கஜானனா!உன் அருமை நாமம்
                                அதற்கிணை ஒன்றெனில் அது சதுர்வேதம்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 வக்ரதுண்டா!உன் ஒப்பில்லா நாமம்
                                 ஓதுவோர் வாழ்வினில் ஒழிந்திடும் தொல்லை;
                                 சூர்ப்பகர்ணா! உன் சுப நாமம்
                                 சொல்பவர்க்கென்றும் சோகமே இல்லை!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !

                                 ஹேரம்பா!உன் ஜகம்புகழ்நாமம்
                                 ஜெபிப்போர் குறைகள் யாவையும் தீரும்;
                                 ஸ்கந்தபூர்வஜா!உன் திருநாமம்
                                 ஸ்மரிப்போர் வேண்டியவை நிறைவேறும்!

வேழமுகா! உன் ஷோடசநாமம்
ஓதிடில் நிலவும் உலகினில் க்ஷேமம் !









Friday, August 5, 2011

தாயே!தாள் பதிப்பாய்!


தாயே!தாள் பதிப்பாய்!
[கலாவின் குரலில் இந்தபாட்டைக்கேட்டு மகிழுங்கள் ]

மின்னல் முகிலிடையே பளிச்சிடுவதுபோல்


கன்னங்கரு முடியிடையே வகிடு மின்ன,


கன்னல்கரத்தாளாய்க் காணும் அபிராமி!


உன்பொன்னடி சென்னியில் பதித்துவிடு!




விடம் விழுங்கிய விடையவன் மேனியிலே


இடப்பாகம் அபகரணம் செய்தவளே!


மதங்கன் மகளே!உந்தன் மலரடியால்


மடமதியேன் சென்னியை மிதித்துவிடு!




அத்தையாய்க் குறமகள் உறவாடுகிறாள்!


தத்தையும் தொற்றிக்கொண்டதே உன் தோளில்!


சொத்தையோ,சுக வாழ்வையோ வேண்டவில்லை;


பக்தைமேலுந்தன் தாள் பட்டால் போதுமம்மா!




அன்று பிதற்றிய பட்டருக்குதவிடவே


விண்ணில் முழுமதி காட்டி நீ வியக்கவைத்தாய்!


இன்று பாட்டென எண்ணிப் பிதற்றி நிற்கும்


எந்தன் சென்னியில் தாயே!தாள் பதிப்பாய்!

Friday, July 29, 2011

                 எங்க  ஆத்தா !

                               

ஆடியிலே ஆத்தா !ஒன்ன  
தேடி நாங்க ஓடிவந்தோம் ;
கூடி கூடிப் பாடிவந்தோம் செல்லாத்தா!..நீ
 நேராவந்து எங்க முன்னே நில்லாத்தா!

ஏழை பாழை எல்லாம் ஒண்ணா
கூழு வச்சிக் கும்பிடறோம்;
தாழ வந்து ஏத்துக்கடி செல்லாத்தா!..காலந்
தாழ்த்தாம கண்ணுமுன்னே நில்லாத்தா!..காலந்
தாழ்த்தாம கண்ணுமுன்னே நில்லாத்தா!


ஆடியிலே ஆத்தா !ஒன்ன
தேடி நாங்க ஓடிவந்தோம் ;
கூடி கூடிப் பாடிவந்தோம் செல்லாத்தா!..நீ  
நேரா வந்து எங்க முன்னே நில்லாத்தா!

பொன்ன வெக்கும் எடத்தில் சின்ன
பூவவச்சிப் பூசை பண்ணோம்;
மாடி,கோடி வேண்டலடி செல்லாத்தா!..நீ
மனசவுட்டு மறையாம  நில்லாத்தா..நீ
மனசவுட்டு  மறையாம  நில்லாத்தா!

ஆடியிலே ஆத்தா !ஒன்ன

தேடி நாங்க ஓடிவந்தோம் ;
கூடி கூடிப் பாடிவந்தோம் செல்லாத்தா!..நீ
நேராவந்து எங்க முன்னே நில்லாத்தா!



[ கே..ஆர் எஸ் இன் படவேடு அம்மன் பதிவும்,கவிநயாவின் 
'ஆடியிலே கூழு வச்சு' பதிவும்  ஏற்படுத்தியபாதிப்பின் விளைவு என்னுடைய ஆத்தா பாட்டு!]


Sunday, June 26, 2011

தாயே!நான் உன் சேய்!


   தாயே!நான் உன் சேய்!

தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!

பிறவிக்கடலில் மூழ்கக் கண்டும்
பாராமுகம் ஏனம்மா?
புகல் வேண்டிக் கதறும் பிள்ளைக்கு
பெற்றவள் பதில் 'மௌனமா?'

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

முன்வினைப் பயன் தந்தபின்னும்
சினம் ஏன் தணியவில்லையோ?
திருந்தி வருந்தும் குழந்தை கண்டு
இதயம் இளகவில்லையோ?

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

துட்டப்பிள்ளையைத் திட்டியடித்துத்
திருத்தும் உரிமை உனக்குத்தான்!
தாயுன் மடியில் புகுந்து கொஞ்சும்
உரிமை எனக்கே எனக்குத்தான்!

[தாயே !என்னைப் பூங்கரத்தால்
வாரி அள்ளம்மா!
சேயாய் என்னை உந்தன் தோளில்
சாய்த்துக்கொள்ளம்மா!]

Thursday, June 23, 2011

கந்தா!நீயே கதி!


                               கந்தா!நீயே கதி!

                        

                             சாத்திரம் அறியேன்-அக்னி
                            ஹோத்திரம் நான் செய்ததில்லை;
                            ஆத்திரம் அடக்கும் யோக
                            சூத்திரம் பயின்றதில்லை;
                            கூத்தபிரானின் மூன்றாம்
                            நேத்திரத்திலே உதித்த
                            கார்த்திகேயா!உன் கழல்கள்
                            மாத்திரமே கதி எனக்கு!


                           க்ஷேத்திர க்ஷேத்திரமாய் தீர்த்த
                           யாத்திரை நான் செல்வதில்லை;
                           தோத்திரத்துதிகள் பாடும்
                            நாத்திறமும் எனக்கில்லை;
                            மூத்திரமலம் நிறைந்த
                            பாத்திரப்பிறவி போக்கும்
                            சூத்திரம் ஷண்முகா!உன்பேர்
                            மாத்திரமே என்றுணர்ந்தேன்!

Thursday, June 16, 2011

அருள்புரிவாள் அபிராமி

அருள்புரிவாள் அபிராமி

அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;
கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம். 

       அன்று தெய்வக்குழந்தைக்குப் பாலூட்டியே,
                        தமிழர்க்கு சிவகவியைத் தந்தாள் 'அம்மா'!
                        தஞ்சம் என்றே அண்டும் அடியார்க்கெல்லாம்
                        அஞ்சேல் என்றே அபயம் அளிப்பாள் 'அம்மா'!
அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;
கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம். 


      அன்று படிப்பில்லா பாமர பக்தனுக்கு,
                      பார்போற்றும் புலமையைத் தந்தாள் 'அம்மா'!
                      புகல் வேண்டித் தனை நாடும் பக்தர்க்கெல்லாம்,
                      சுகமான  பதநிழலைத் தருவாள் 'அம்மா'!
அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;
கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம். 

  
       அன்று ஊமைக்கு வாய் பேசும் வரமளித்தே,
                       தேமதுரத் துதி பாட வைத்தாள் 'அம்மா'!
                       'கதி நீயே ' எனக்கதறும் தீனர்க்கெல்லாம்,
                       இதமான பத நிழலை அருள்வாள் 'அம்மா'!
அன்னை அபிராமி சந்நிதியில் நாம் கூடுவோம்;
கன்னல் கரத்தாள்முன் கைகூப்பித் துதி பாடுவோம். 


                     

Tuesday, June 7, 2011

வேண்டும்!

                                                

                        வேண்டும்!
[இந்த பஜனைப்பாட்டை ''நான் பேச நினைப்பதெல்லாம்''என்ற படப்பாட்டு மெட்டில் பாடிப்பாருங்கள் ; 
  சூப்பரா  இருக்கும்  ]


                       கந்தா! என் மனத்தாசை நிறைவேறவேண்டும்;
                  நெஞ்சில்  நீ நிரந்தரமாய்க் குடியேறவேண்டும்;
                                                                   என்குறைதீர  வேண்டும்;

                                                                  முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 


                 வேலேந்தி மயில்மீது நீதோன்ற வேண்டும்;
                                                                   நான்காணவேண்டும்;
                                                       முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 
                தேனோடு தினையை நான்  பரமாறவேண்டும்;
                                                                   நீ பசியாற வேண்டும்.
                                                        முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 


               செல்லுமிடமெல்லாமுன் தலமாக  வேண்டும்;
                                                               உன்மயிலாடவேண்டும்;
                                                        முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 
              ''என்னுள் நீ,உன்னுள் நான்''என்றாக வேண்டும்;
                                                             நாம் ஒன்றாக வேண்டும்.
                                                        முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 


                   நெஞ்சுருகி நானுந்தன்துதிபாடவேண்டும்;
                                                             நீஜதிபோடவேண்டும்;
                                                        முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 
                   வஞ்சியுடன் குஞ்சரியும் ஸ்ருதி போடவேண்டும்;
                                                                          நீமகிழ்ந்தாட வேண்டும்;
                                                        முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 


                    உன் நிழலே எனது பஞ்சணையாக வேண்டும்;
                                                                     நான் துஞ்ச வேண்டும்;
                                                       முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 
                    உன் கழலே என் தலையணையாக வேண்டும்;
                                                             என்  துணையாக வேண்டும்.
                                                        முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 


                     நிறுத்தாமல் என் நா உன்பேர் கூறவேண்டும்;
                                                               என்வினைதீற வேண்டும்;
                                                        முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 
                     பிறவிக்கடல் தாண்டிக்கரையேற வேண்டும்;
                                                     நான் கடைத்தேற வேண்டும்.
                                                        முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 


                                                                  

                    சரவணப்பொய்கையாய் என் மனம்மாற  வேண்டும்;
                                                                                      பா மலர வேண்டும்;
                                                       முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா! 
                    பாமலர்கள் நீ அமரும் மணையாக வேண்டும்;
                                                                      மணங்கமழ வேண்டும்;
                                                      அருள் மணங்கமழ வேண்டும்;
                                               நினதருள் மணங்கமழ வேண்டும்!


                     கந்தா! என் மனத்தாசை நிறைவேறவேண்டும்;
                    நெஞ்சில்  நீ நிரந்தரமாய்க் குடியேறவேண்டும்;
                                                                   என்குறைதீர  வேண்டும்;

                                                                  முருகா,ஓம் முருகா!
                                                       முருகா,ஓம் முருகா!